நாமக்கல் முதலைப்பட்டியில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் அதிகாரிகள் தகவல்


நாமக்கல் முதலைப்பட்டியில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:30 AM IST (Updated: 27 Jun 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் முதலைப்பட்டியில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்,

நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறநகர் பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் முதலைப்பட்டி பகுதியில் ரூ.8 கோடிக்கு அறநிலையத்துறையிடம் இருந்து 12.9 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.51 கோடியே 63 லட்சம் மதிப்பில் புதிய பஸ்நிலையம் அமைக்க திட்ட அனுமதி அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

இருப்பினும் நகராட்சியின் புதிய பஸ்நிலையம் அமைய உள்ள முதலைபட்டியின் உட்புறம் சுற்று வட்டப்பாதை செல்வதால், பஸ்நிலையத்திற்கு சுற்றுவட்ட பாதையில் இருந்து 200 மீட்டர் நீளம் மற்றும் 40 மீட்டர் அகலத்திற்கு அணுகுசாலை அமைக்க கோரிக்கை எழுந்தது.

இந்த அணுகுசாலைக்கு 0.83 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்ட நிலையில், மீதமுள்ள சுமார் 1 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பஸ்நிலையம் அமைக்கும் பணி காலதாமதமாகி வந்தது.

இந்த நிலையில் புறவழிச்சாலைக்கு நிலமதிப்பு மற்றும் மதிப்பீட்டு தொகை பல மடங்கு அதிகரித்து உள்ளதால், திருத்திய நிர்வாக அனுமதி பெறப்பட்டு, கடந்த மாதம் 30-ந் தேதி புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த திருத்திய மதிப்பீட்டில் அணுகுசாலை அமைக்க நிலம் கையகப்படுத்தவும், சாலை அமைக்கவும் தேவையான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று சுற்றுவட்ட பாதை அமையும் இடத்தில் இருந்து புதியபஸ் நிலையத்திற்கு அணுகுசாலை அமையும் இடம் குறித்து நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது சேலம் நெடுஞ்சாலைத்துறை (நபார்டு) செயற்பொறியாளர் அகிலா, அணுகுசாலை அமைய உள்ள இடம் குறித்த வரைபடம் மூலம் விளக்கம் அளித்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அசோக்குமார், மண்டல செயற்பொறியாளர் கமலநாதன், நகராட்சி ஆணையாளர் சுதா, தாசில்தார் சுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

அணுகுசாலைக்கு நிலம் எடுப்பு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பஸ் நிலையத்திற்கான வடிவமைப்பு நகர் ஊரமைப்பு துறையிடம் இருந்து பெறப்பட்டு, தனியார் பங்களிப்புடன் பஸ்நிலைய பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story