காவல்துறையில் சட்டவிரோத குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
காவல்துறையில் சட்டவிரோத குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை,
மதுரையை சேர்ந்தவர் தேவராஜன். இவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த 2007–ம் ஆண்டில் இவர் லஞ்சம் வாங்கியதாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை குற்றப்பிரிவு காவலர் குடியிருப்பில் வசித்ததற்கான வாடகை தொகை ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 740–ஐ செலுத்தும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் நிர்வாக காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கு பிறகும் அவர் மதுரையில் குடியிருந்த வீட்டை காலி செய்யவில்லை. இதனால் தான் அவர் வாடகை பாக்கி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது“ என வாதாடினார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
காவல்துறையில் ஒழுக்கம் என்பது இருதயத்தை போன்றது. போலீசார் தாங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்வதிலும் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். ஒழுக்க விவகாரத்தில் போலீசாரும், கோர்ட்டும் சமரசம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அது சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். போலீசாருக்கு குடியிருப்புகளை ஒதுக்குவது, அவற்றை காலி செய்வது போன்ற நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
மழை, வெயில், குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் போலீசார் வருடம் முழுவதும் தங்களது கடமையை செய்கிறார்கள். அவர்களுக்கு பணிச்சலுகை, நலத்திட்டங்கள் போன்றவை மற்றவர்களை போல கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் தங்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் கிடைக்கவில்லை என நினைத்துவிடக்கூடாது.
எனவே தமிழகம் முழுவதும் போலீசாரின் குடியிருப்புகளில் நேரில் ஆய்வு செய்து, அங்கு அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக குடியிருந்து வரும் போலீசாரின் பட்டியலை தயாரிக்க தனி குழு அமைக்க வேண்டும். இந்த குழுவின் ஆய்வறிக்கை அடிப்படையில் சட்டவிரோத குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய வேண்டும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.