தங்கையை காதலித்ததால் ஆத்திரம் கல்லூரி மாணவர் குத்திக்கொலை; சக மாணவர் கைது


தங்கையை காதலித்ததால் ஆத்திரம் கல்லூரி மாணவர் குத்திக்கொலை; சக மாணவர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2019 5:15 AM IST (Updated: 27 Jun 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

தங்கையை காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திக்கொன்ற சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் தனியார் சமையல் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு ஆந்திர மாநிலம் ஆனந்தபூரை சேர்ந்த சவன்குமார்(வயது 20) என்பவர் இளங்கலை கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவருடன், அதே ஊரைச் சேர்ந்த ஹரிஹர சண்முகம் (20) என்பவரும் முதலாம் ஆண்டு இளங்கலை கேட்டரிங் படித்து வந்தார். இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

ஹரிஹர சண்முகத்தின் தங்கை முறையான உறவுக்கார பெண்ணை சவன்குமார் காதலித்து வந்தார். இதை அறிந்த ஹரிஹர சண்முகம், தனது தங்கையை காதலிக்க கூடாது என சவன்குமாரை பலமுறை கண்டித்தார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று சவன்குமார், செல்போனில் மீண்டும் அந்த பெண்ணிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஹரிஹர சண்முகம் ஆத்திரம் அடைந்தார். கல்லூரிக்கு வந்த சவன்குமாரை, வாசலிலேயே நிறுத்தி, தனது தங்கையுடனான காதலை கைவிடுமாறு கூறினார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹரிஹர சண்முகம், தன்னிடம் இருந்த கத்தியால் சவன்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சவன்குமார், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், ஹரிஹர சண்முகத்தை மடக்கி பிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்துவந்த துரைப்பாக்கம் போலீசார், கொலையான சவன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக மாணவர்கள் பிடித்து வைத்து இருந்த மாணவர் ஹரிஹர சண்முகத்தை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

காதல் விவகாரத்தில் கல்லூரி வாசலிலேயே மாணவர் ஒருவரை சக மாணவரே குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story