கும்மங்குளத்தில் கோவில் முன் உள்ள கடையை அகற்றக்கூடாது என பொதுமக்கள் சாலை மறியல்


கும்மங்குளத்தில் கோவில் முன் உள்ள கடையை அகற்றக்கூடாது என பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:15 AM IST (Updated: 28 Jun 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

கும்மங்குளத்தில் கோவில் முன் உள்ள கடையை அகற்றக்கூடாது என பொதுமக்கள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே கும்மங்குளத்தில் உள்ள முருகன் கோவிலில் ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் சுமார் 50 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் முன்பு கேவிகோட்டையை சேர்ந்த மதி என்பவருக்கு ஒரு பிரிவினர் முடி திருத்தும் கடையை அமைத்து கொடுத்து உள்ளனர். இந்நிலையில் ஒரு சமூகத்தை சேர்ந்த விக்னேஸ்வரன், ராஜா, மங்காயி, விஜயா, கவித்திரன், லட்சுமி, மனோஜ் ஆகியோர் கோவில் தேரோடும் வீதியில் கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த சேவியர், முத்துக்கண்ணு, அருளாற்று, சந்தானம், செல்வம் ஆகியோர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேரை கட்டையால் தாக்கினார்கள்.

இதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவில் முன்புள்ள கடையை அகற்றக்கோரியும், இது குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் ஒரு தரப்பை சேர்ந்த மக்கள் ஆலங்குடி வடகாடு முக்கத்தில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார்.

இதற்கிடையே கோவில் முன்புள்ள கடையை அகற்றக்கூடாது என்று கூறி மற்றொரு தரப்பினர் கும்மங்குளத்தில் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுகி, பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story