காங்கிரசில் அதிருப்தியாளர்களை சரி செய்து விட்டோம்; பரமேஸ்வர் பேட்டி
காங்கிரசில் அதிருப்தியாளர்களை சரிசெய்துவிட்டோம் என்றும், இனி எம்.எல்.ஏ.க்கள் யாரும் ராஜினாமா செய்யமாட்டார்கள் என்றும் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதாவினர் ஏற்கனவே ஆபரேஷன் தாமரையை தொடங்கினர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. அதனால் இப்போது, ஆபரேஷன் தாமரையை டெல்லிக்கு இடம் மாற்றியுள்ளனர்.
இதன் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரை ராஜினாமா செய்ய வைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். ‘ஆபரேஷன்’ செய்ய எங்களுக்கும் தெரியும். பா.ஜனதாவில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுப்போம்.
இத்தோடு நிறுத்திக்கொண்டால் விட்டுவிடுவோம். இல்லாவிட்டால் அதன் பின்விளைவுகளை பா.ஜனதாவினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் எந்த காரணத்திற்காக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர் என்பது எனக்கு தெரியவில்லை.
அவர்களின் ராஜினாமா கடிதம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜினாமா செய்துள்ளதாக ஆனந்த்சிங் கூறியுள்ளார். ஒருவேளை தனது ராஜினாமாவுக்கு அவர் கூறிய காரணம் உண்மையாக இருந்தால், அதுபற்றி பரிசீலிப்போம்.
மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் சரியான முறையில் தான் செயலாற்றி வருகிறார். எங்கள் கட்சியில் வேறு எம்.எல்.ஏ.க்கள் யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள். இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்.
அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் நேற்றே (அதாவது நேற்று முன்தினம்) சரிசெய்துவிட்டோம். காங்கிரசில் தற்போது குழப்பம் இல்லை. அதிருப்தியாளர்களுக்கு பதவி கொடுக்க 5 மந்திரிகள் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.