ஆடல், பாடல் நிகழ்ச்சி அனுமதிக்கான வழிகாட்டுலை தீவிரமாக பின்பற்ற வேண்டும்; போலீசாருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஆடல், பாடல் நிகழ்ச்சி அனுமதிக்கான வழிகாட்டுதலை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை பீ.பீ.குளத்தைச் சேர்ந்த சீனிமுகமது என்பவர் தமிழ்நாடு முத்தமிழ் மேடை நாடக கலைஞர்கள் நலச்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தமிழகத்தில் மேடை நாடக கலைஞர்கள் கோவில் விழாக்களில் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் அறிமுகமான பிறகு தான் நாட்டுப்புற கலைஞர்கள் வாய்ப்பு இல்லாமல் வருமானத்தை இழந்து தவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை பல்வேறு குழுக்கள் நடத்தி வருகின்றனர். ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் ஆபாச நிகழ்ச்சி போல் நடத்தப்படுகிறது.
ஆடல், பாடலுக்காக அழைத்து வரப்படும் பெண்கள் அரை நிர்வாணமாக ஆட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இது பெண்கள் பார்க்க முடியாத நிகழ்ச்சியாக மாறியுள்ளது. கோவில் விழாவில் ஆபாச நிகச்சிகள் நடத்துவது வேதனையானது. எனவே தமிழகத்தில் நாட்டுப்புற கலை, கலைஞர்களை பாதுகாக்க ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்,
இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. கடந்த ஏப்ரல் மாதம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆடல் பாடல் நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, பல குரல் நிகழ்ச்சி நடத்த 15 நாட்களுக்கு முன்பே உரிய விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது இந்த நிகழ்ச்சியில் ஆபாச பாடல், நடனம், இரட்டை அர்த்த வசனங்கள், பெண்கள், குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்தல் போன்றவை இருக்காது, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாது, மதம், சாதி சார்ந்த பாடல்கள், வசனம் இடம் பெறாது என விழா அமைப்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தின் மீது காவல்துறையினர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும். அனுமதி வழங்க மறுக்கப்பட்டால் அதற்கான காரணத்தை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும். அனுமதி வழங்கப்பட்டால் இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்பன உள்பட 12 நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது‘ என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதில் டி.ஜி.பி.யின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை போலீசார் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.