தஞ்சையில் பஸ்சின் மேற்கூரையில் தூங்கிய போலீஸ்காரர் தவறி கீழே விழுந்தார் சுயநினைவு இன்றி மருத்துவமனையில் அனுமதி


தஞ்சையில் பஸ்சின் மேற்கூரையில் தூங்கிய போலீஸ்காரர் தவறி கீழே விழுந்தார் சுயநினைவு இன்றி மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 4 July 2019 3:45 AM IST (Updated: 4 July 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பஸ்சின் மேற்கூரையில் தூங்கிய போலீஸ்காரர் தவறி கீழே விழுந்தார். இதில் சுயநினைவை இழந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் குடியான தெருவை சேர்ந்தவர் விஜய்(வயது 29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் திருச்சியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். பாதுகாப்பு பணிக்காக 80 பேர் கொண்ட குழுவினர் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர். விஜய் அந்த குழுவினருடன் இடம் பெற்று இருந்தார்.

இவர்கள் அனைவரும் மங்களபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்கியிருந்தனர். இரவு நேரத்தில் அறையில் போலீஸ்காரர்கள் அனைவரும் படுத்து தூங்கினர். கொசுக்கடி அதிகமாக இருந்ததால் தூக்கம் வராமல் விஜய் அவதிப்பட்டார். இதனால் அவர், அறையை விட்டு வெளியே வந்து வராண்டாவில் படுத்தார். அப்போதும் அவருக்கு தூக்கம் வரவில்லை.

இதன் காரணமாக அவர், போலீஸ் பஸ்சில் ஏறி மேற்கூரையில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை தூக்க கலக்கத்தில் உருண்டு பஸ்சின் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர் கீழே விழுந்து பல மணிநேரமாகியும் அவர் அருகே யாரும் செல்லவில்லை.

இந்த நிலையில் மாலையில் சக போலீஸ்காரர்கள் சென்று பார்த்தபோது, படுகாயத்துடன் விஜய் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுயநினைவு இன்றி காணப்படும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய்யை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க உறவினர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story