பல்லடத்தில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது; கார், பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
பல்லடத்தில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பல்லடம்,
பல்லடம் பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடுதல், தனியாக நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து நகையை பறித்து செல்லுதல், வழிப்பறி, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்தன. குறிப்பாக மர்ம ஆசாமிகள் காரில் வந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து குற்ற சம்பவங்களை குறைக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ஆசாமிகளை கைது செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி பல்லடம்–மங்கலம் சாலை வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கார்த்திக்ராஜா (வயது 30) அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல், கார்த்திக் ராஜாவிடம் ரூ.1000–ஐ வழிப்பறி செய்து விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக பல்லடம் போலீசில் கார்த்திக் ராஜா புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கார்த்திக் ராஜாவிடம் வழிப்பறி செய்த ஆசாமிகள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (23) மற்றும் பாலமுருகன் (28) என தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1000–ம் மற்றும் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களையும், ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 2 பேரும் பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.