வேலூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் சிக்கின


வேலூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் சிக்கின
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 6 July 2019 7:09 PM IST)
t-max-icont-min-icon

சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து வேலூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன.

 

வேலூர், 

வேலூரை அடுத்த இடையஞ்சாத்து பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்ராஜ். இவர் வேலூரில் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2010–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அப்போது இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 28–ந் தேதி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரமேஷ்ராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்தநிலையில் இடையஞ்சாத்து பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று காலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர். அங்கு அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி மற்றும் சுமார் 6 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

இங்கு சோதனை மேற்கொண்ட அதே நேரத்தில் ஊசூர் அருகே தெள்ளூர்பாளையத்தில் உள்ள ரமேஷ்ராஜின் தந்தை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் மற்றொரு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். பிற்பகல் 2 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் இடையஞ்சாத்துவில் உள்ள ரமேஷ்ராஜ் வீட்டுக்கு விசாரணைக்காக வந்தார். அங்கு அவர் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது அரசு அலுவலர்கள் சிலர் சாட்சிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்த சோதனையில் ரமேஷ்ராஜின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘ரமேஷ்ராஜ் ஏற்கனவே வேலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் வேலூரில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. அவர் மீது சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதில் பல கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.


Next Story