கர்நாடகாவில் பிடிபட்ட தீவிரவாதியிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை கிருஷ்ணகிரியில் பரபரப்பு


கர்நாடகாவில் பிடிபட்ட தீவிரவாதியிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை கிருஷ்ணகிரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 6 July 2019 11:30 PM GMT (Updated: 6 July 2019 2:21 PM GMT)

வெடிகுண்டு சோதனை நடத்தியதாக கிடைத்த தகவலால் கர்நாடகாவில் பிடிபட்ட தீவிரவாதியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள தொட்டபல்லாபூர் பகுதியில் கடந்த மாதம் 25–ந் தேதி ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜே.எம்.பி.) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் (வயது 28) என்பவரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் ராம்நகர் அருகே உள்ள திப்பு நகரில் கால்வாயில் இருந்து வெடிக்காத 2 குண்டுகளை கடந்த மாதம் 26–ந் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை செயல் இழக்க செய்தனர். மேலும் அவரது கட்டுப்பாட்டில் 6 வெடிகுண்டுகள் இருந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் தீவிரவாதி ஹபீப் உர் ரஹ்மான் ஷேக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், கர்நாடக மாநில தனிப்பிரிவு போலீசாருடன் நேற்று காலை கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சையது பாஷா மலை மீது தீவிரவாதி ஹபீப் உர் ரஹ்மான் ஷேக்கை அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் அங்கு விசாரணை நடந்தது.

இதைத் தொடர்ந்து தீவிரவாதியை பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர். கடந்த, 2012–ம் ஆண்டு கிருஷ்ணகிரி சையத் பாஷா மலை மீது ஹபீப் உர் ரஹ்மான் ஷேக், வெடிகுண்டு சோதனை நடத்தி உள்ளதாகவும், அதனால் தடயங்கள் மற்றும் வெடிகுண்டுகள் எதுவும் உள்ளதா? என்று கண்டுபிடிப்பதற்காக அந்த தீவிரவாதியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இங்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கூறியதாவது:–

பெங்களூருவை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர் தீவிரவாதி ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் உடன் கிருஷ்ணகிரியில் இன்று (நேற்று) விசாரணை நடத்தி உள்ளனர். அவர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர். கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மலை மீது ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் வெடிகுண்டு சோதனை நடத்தியதாக தகவல் கூறியதால் என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவரை இங்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த பகுதியில் எந்த வெடிகுண்டுகளும், பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.

மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் கடந்த 30.3.2014 அன்று குண்டுவெடிப்பு நடந்தது. அந்த வழக்கில் ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், இந்திய அரசு மற்றும் வங்கதேச அரசுகளுக்கு எதிராக போர் தொடுக்க, ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற அமைப்பு சதி செய்து வருவதாகவும், அதில் ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் முக்கிய உறுப்பினர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதி ஹபீப் உர் ரஹ்மான் ஷேக், ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற அமைப்பின் தலைவர் ஜாஹித் உல் இஸ்லாம் என்கிற கவுசரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்பு நடத்திய பல்வேறு பயிற்சி முகாம்களில் இவர் பங்கேற்றுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் போலீசாரின் கெடுபிடி அதிகமானதால் இவர் பெங்களூரு அருகே உள்ள தொட்டபல்லாப்பூர் பகுதிக்கு வந்து பதுங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் தான் ஹபீப் உர் ரஹ்மான் ஷேக் கடந்த 25–ந் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பெங்களூரு தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கிறார்கள். இந்த விசாரணையை தொடர்ந்து அவரை கொல்கத்தாவிற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகாவில் பிடிபட்ட தீவிரவாதியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story