கோவையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியா? அடுக்கி வைத்திருந்த பணம் வெளியே தெரிந்ததால் பரபரப்பு


கோவையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியா? அடுக்கி வைத்திருந்த பணம் வெளியே தெரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 7 July 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே தெரிந்தது. இதனால் அது கொள்ளை முயற்சியா? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கோவை,

கோவை ராமநாதபுரம் சிக்னல் பகுதியில் பங்கஜா மில் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் பணம் எடுப்பதற்காக நேற்று மதியம் ஒருவர் சென்றார். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி (டிரே) மூடப்படாமல், கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது வெளியே தெரிந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மர்ம ஆசாமிகள் யாரோ ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று நினைத்து அவர் மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அந்த ஏ.டி.எம். முன்பு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வங்கி நிர்வாகத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய தனியார் நிறுவன ஊழியர்கள் எந்திரத்தை சரியாக மூடாமல் சென்றது தெரியவந்தது. உடனே அந்த தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்த ஏ.டி.எம். எந்திரத்தை மூடி கோளாறை சரி செய்தனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

ஏ.டி.எம். எந்திரங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் வெளியே தெரியாதவாறு மூடப்பட்டு இருக்கும். ஆனால் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணம் வெளியே தெரியும் படி இருந்ததால் கொள்ளை முயற்சி நடந்ததாக கூறியதால் மக்கள் கூடி விட்டனர். ஆனால் ஏ.டிஎம். எந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர்கள் அதை சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத் தில் உள்ள சிறிய இடைவெளி வழியாகத் தான் அடுக்கி வைத்திருந்த பணம் வெளியே தெரிந்தது. ஆனாலும் அந்த பணத்தை வெளியே எடுக்க முடி யாது. ஏ.டி.எம். எந்திரத்தை சரியாக மூடாததால் அது செயல்படவில்லை. தற்போது அந்த எந்திரம் செயல்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story