மயக்க மருந்தை தடவி பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை; சாமியார் உள்பட 4 பேர் மீது மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார்
மதுரையில் மயக்க மருந்தை தடவி பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் உள்பட 4 பேர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
மதுரை,
மதுரையை சேர்ந்த 29 வயதான பெண் போலீஸ் ஏட்டு ஒருவர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
எனக்கு கடந்த 2007–ம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் எனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனது கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் எனக்கு நன்கு அறிமுகமான பூமிநாதன், தல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் என்னை கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறினார்கள். இதற்காக அவர்கள் ரூ.1½ லட்சம் வரை கேட்டனர். அந்த பணத்தை சிறிது, சிறிதாக நானும் கொடுத்தேன். இந்த நிலையில் என்னை மதுரை காந்திமியூசியம் அருகே உள்ள ஒரு ஒட்டலுக்கு வரச்சொன்னார்கள்.
நான் அங்கு சென்ற போது என் கணவரை ஒரு சாமியாரை வரவழைத்து வசியம் செய்து சேர்த்து வைப்பதாக கூறினார்கள். அதற்காக எனது கணவரின் சட்டை மற்றும் அவரது காலடி மண் மற்றும் 50 ஆயிரம் ரூபாயுடன் வருமாறு தெரிவித்தனர். நானும் அவர்கள் கூறியபடி பணத்தை ஏற்பாடு செய்து, அதே இடத்திற்கு சென்றேன். அங்கு பூமிநாதன், ஆறுமுகம் மற்றும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சாமியார் ஜோதி ஆகியோர் காரில் இருந்தனர்.
பின்னர் அவர்கள் வசியம் செய்வதற்கு தேவையான பூஜை பொருட்களை வாங்க வேண்டும் என்று என்னை காரில் அழைத்துக் கொண்டு கீழமாசி வீதிக்கு சென்றோம். அங்கு பூஜை பொருட்கள் வாங்கி கொண்டிருந்த போது சாமியாருக்கு அருள்வந்து, கேரளாவிற்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். எனவே காரில் மீண்டும் காந்தி மியூசியம் பகுதிக்கு வந்தோம். அப்போது சாமியார் தடங்கலாக உள்ளது என்று கூறி எனது உடலில் ஒருவகையான மை போன்ற ஒரு பொருளை தடவினார். அதன் பின்னர் எனக்கு மயக்கம் வந்தது.
அதன்பின்னர் சில மணி நேரம் கழித்து எனக்கு சுயநினைவு வந்த போது எனது ஆடை கலைந்த நிலையில், எனக்கு பாலியல் ரீதியான துன்பம் நடைபெற்றதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் நான் பூமிநாதனுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அப்போது பூமிநாதன் தந்தை கரந்தமலை என்பவர் போனில் என்னிடம் பேசினார்.
அவர் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால், கஞ்சா வியாபாரிகளை வைத்து என்னை சீரழித்து விடுவேன் என்று மிரட்டினார். மேலும் பலமுறை என்னை தொடர்ந்து மிரட்டி வந்தார். என்னை கணவருடன் சேர்த்து வைப்பதாக ஏமாற்றி, பணத்தை பறித்து, மிரட்டி வரும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புகார் அளித்த பெண் ஏட்டுவை, போலீசார் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். இது குறித்து தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி நடவடிக்கை எடுத்து, சாமியார் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.