காங்.-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா - கர்நாடக அரசியலில் பரபரப்பு


காங்.-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா - கர்நாடக அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 July 2019 5:00 AM IST (Updated: 7 July 2019 4:53 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென்று ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் இருந்து வருகின்றனர். கூட்டணி அரசில் மந்திரி பதவி கிடைக்காமல் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனால் 105 எம்.எல்.ஏ.க்கள் பலம் கொண்டுள்ள பா.ஜனதா கட்சி, கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு அரசு அமைக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. இதற்காக ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா கட்சி 2 முறை முயற்சி செய்தது. ஆனால் அது பலன் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், மந்திரி பதவியில் இருந்து நீக்கியதால் அதிருப்தி அடைந்த கோகாக் தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் பல்லாரி மாவட்டம் விஜயநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் கடந்த 1-ந் தேதி தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் 2 பேரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் ஆனந்த்சிங் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் அலுவலகத்திலும், கவர்னர் வஜூபாய் வாலாவிடமும் கொடுத்திருந்தார். ஆனால் ரமேஷ் ஜார்கிகோளி தனது ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார். கடந்த 1-ந் தேதி அவர்கள் 2 பேரும் ராஜினாமா செய்திருந்தாலும், அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் நேற்று மதியம் 12.30 மணியளவில் விதானசவுதாவுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சபாநாயகர் அலுவலகத்திற்கு சென்று, ரமேஷ்குமாரிடம் ராஜினாமா கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் விதானசவுதாவில் பரபரப்பு உண்டானது.

12 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கு சபாநாயகர் ரமேஷ்குமார் இல்லை. அவர் தனது உறவினர் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால், உறவினரை பார்க்க புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் ரமேஷ்குமாரை எதிர்பார்த்து சபாநாயகர் அலுவலகத்திலேயே 12 எம்.எல்.ஏ.க்களும் காத்து நின்றனர். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பற்றி அறிந்ததும் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுராவில் இருந்து பெங்களூரு விதானசவுதாவுக்கு உடனடியாக புறப்பட்டு வந்தார்.

அங்கு வைத்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். அதே நேரத்தில் பெங்களூரு ராஜராஜேசுவரி நகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான முனிரத்னா வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை மந்திரி டி.கே.சிவக்குமார் வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் டி.கே.சிவக்குமார் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், சபாநாயகர் ரமேஷ்குமார் விதானசவுதாவுக்கு வராத காரணத்தால், சபாநாயகர் அலுவலக செயலாளர் விசாலாட்சியிடம் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்கள். அந்த ராஜினாமாவை அவர் பெற்றுக்கொண்டார். ராஜினாமா செய்த 11 எம்.எல்.ஏ.க்களின் விவரம் வருமாறு:-

அதாவது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராமலிங்கரெட்டி (பி.டி.எம். லே-அவுட் தொகுதி), சோமசேகர் (யஷ்வந்தபுரம்), பி.சி.பட்டீல் (கிரேகெரூர்), பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), சிவராம் ஹெப்பார் (எல்லாப்பூர்), மகேஷ் கமடள்ளி (அதானி), பிரதாப் கவுடா பட்டீல் (மஸ்கி) மற்றும் ரமேஷ் ஜார்கிகோளி ஆகிய 8 பேரும் ஆவார்கள். இதுபோல, ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத் (உன்சூர்), கோபாலய்யா (மகாலட்சுமி லே-அவுட்), நாராயணகவுடா (கே.ஆர். பேட்டை) ஆகிய 3 பேரும் ஆவார்கள்.

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தனது அலுவலகத்தில் கடிதம் கொடுத்திருப்பதை சபாநாயகர் ரமேஷ்குமாரும் உறுதி செய்தார். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சட்டப்படி ஆலோசித்து முடிவு எடுப்பதாகவும் சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று மாலையில் பெங்களூரு ராஜராஜேசுவரிநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான முனிரத்னா, விதானசவுதாவில் உள்ள சபாநாயகர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, சபாநாயகர் அலுவலக செயலாளரிடம் கடிதம் கொடுத்தார். அதாவது முதலில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை மந்திரி டி.கே.சிவக்குமார் பறித்து கொண்டதால், மற்ற 11 பேருடன் சேர்ந்து அவரால் கடிதம் கொடுக்க முடியாமல் போனது. இதனால் தனியாக வந்து தனது ராஜினாமா கடிதத்தை முனிரத்னா கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், சபாநாயகரின் செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி, பி.சி.பட்டீல், பிரதாப் கவுடா பட்டீல், சிவராம் ஹெப்பார், எச்.விஸ்வநாத், கோபாலய்யா, நாராயணகவுடா ஆகிய 8 பேரும் விதானசவுதாவில் இருந்து கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து 8 எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். அப்போது தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், அதற்கான காரணம் குறித்தும் கவர்னரிடம் 8 பேரும் விளக்கம் அளித்தார்கள்.

நேற்று ஒரே நாளில் 12 எம்.எல்.ஏ.க்களும், ஆனந்த் சிங்கை சேர்த்து 13 பேர் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த எச்.விஸ்வநாத் நிருபர்களிடம் கூறுகையில், ராமலிங்கரெட்டி, அவரது மகள் சவுமியா ரெட்டி, ஆனந்த் சிங் உள்பட மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார். இதனால் நேற்று மட்டும் மொத்தம் 13 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த 1-ந் தேதி ஆனந்த்சிங் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்களது பதவியை இன்னும் ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் மற்றும் மந்திரிகள் பெங்களூருவில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். காங்கிரஸ் மேலிடத்திற்கும் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் அவசர அவசரமாக பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

கர்நாடக சட்டசபையில் மொத்தம் நியமன எம்.எல்.ஏ. உள்பட 225 உறுப்பினர்களின் பலம் உள்ளது. இதில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணிக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பகுஜன்சமாஜ் கட்சி ஒரு எம்.எல்.ஏ. ஆதரவுடன் மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. பா.ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. தற்போது கூட்டணி அரசில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதால், கூட்டணி கட்சிகளின் பலம் 106 ஆக குறைந்துள்ளது.

எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபையில் உறுப்பினர்களின் பலம் (சபாநாயகர் மற்றும் நியமன உறுப்பினர் உள்பட) மொத்தம் 211 ஆக இருக்கும். அந்த சமயத்தில் பா.ஜனதா சட்ட சபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர், நியமன உறுப்பினர் என மொத்தம் 106 பேரின் ஆதரவு கூட்டணி ஆட்சிக்கு கிடைக்கும். இதனால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஒரு வேளை மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி அமெரிக்காவில் உள்ளார். அவர் அமெரிக்காவுக்கு சென்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவுக்கு திரும்புகிறார்.

இதற்கிடையில், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ.க்கள், அங்கிருந்து ஒரே சொகுசு வேனில் ஏறி புறப்பட்டு சென்றனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வருகிற 12-ந்தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story