ஆந்திராவில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் கடத்தப்பட்ட 43 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் 43 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று காலை காவிரி சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த 5 பேரிடம் சந்தேகப்படும்படியாக 3 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. 3 மூட்டைகளில் மொத்தம் 43 கிலோ கஞ்சா இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள், ஒடிசா மாநிலம் கண்ஜாம் அருகே உள்ள தன்தீலன் பகுதியை சேர்ந்த பவஸ்தின் ஜனா (வயது 29), கஜபதி ராய்பங்கா பகுதியை சேர்ந்த பிரதாப் மாஜி (26), அனில்மைர (19) ராயகோடா டபரகோளா பகுதியை சேர்ந்த சரத்மாஜி (19) மற்றும் ராய்பங்கா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி கோவைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 43 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.