கீழ்வேளூர் அருகே குளத்தில் கழிவு பொருட்கள் கொட்டுவதால் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கீழ்வேளூர் அருகே குளத்தில் கழிவு பொருட்கள் கொட்டுவதால் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 July 2019 4:00 AM IST (Updated: 10 July 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே குளத்தில் கழிவு பொருட்கள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்வேளூர்,

கீழ்வேளூரை அடுத்த பட்டமங்களம் ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகே மில் குளம் அமைந்துள்ளது. ஊராட்சிக்கு சொந்தமான இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மில் குளம் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. குளம் ஆக்கிரமிக்கப்பட்டு குளம் இருக்கும் இடமே தெரியாமல் காணப்படுகிறது.

மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள், கழிவுபொருட்களை குளத்தின் ஓரம் கொட்டுகின்றனர். குப்பைகள் கொட்டப்படுவதால் குளம் மாசுபடிந்து தண்ணீர் கருப்பு நிறமாக மாறி வருகிறது. பட்டமங்களம் மற்றும் அதன் சுற்றியுள்ள குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

துர்நாற்றம்

குளத்தில் கழிவு பொருட்கள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. குளத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தும், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் வரும் பாதையில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள கழிவு பொருட்கள் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story