கடும் வறட்சி காரணமாக காய்ந்து வரும் தென்னை மரங்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்


கடும் வறட்சி காரணமாக காய்ந்து வரும் தென்னை மரங்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது. எனவே அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆகிய 2 ஆறுகள் ஓடுகிறது. ஆனால் பாசன வசதி பெறும் விவசாய நிலபரப்பு குறைவானதாகவே இருக்கிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி மானாவாரி விவசாய நிலங்களே ஆகும். கிராம பகுதிகளில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்டத்தில் போதிய பருவமழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. எனினும் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல், கரும்பு, நிலக்கடலை, எள், சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வந்தனர். மேலும் தென்னை மரங்களும் வளர்த்து வந்தனர். தற்போது, நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக குறைந்தது. மின்மோட்டாரை இயக்கினாலும் தண்ணீர் வருவதில்லை. இதனால் பயிர்கள் பயிரிடுவதை விவசாயிகள் நிறுத்திவிட்டனர்.

காய்ந்தன

தற்போது, தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வளர்த்து வந்த தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது. குறிப்பாக வெள்ளியணை பகுதியில் ஒவ்வொரு விவசாயி தோட்டத்திலும் குறைந்தபட்சம் 20 மரங்களிலிருந்து 50 மரங்கள் வரை கிணற்றின் அருகிலும், வரப்புகளிலும் இருக்கும். அந்த மரங்களும் காய்ந்துவிட்டது. பெரும்பாலான தோப்புகளில் தென்னை மரங்கள் காய்ந்து மொட்டையாக காட்சி அளிக்கிறது.

கரூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரமாக தென்னைமரங்கள் உள்ளன. தென்னையில் இருந்து பெறப்படும் தேங்காய்கள், இளநீரை விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைத்து வந்தது . மேலும் தென்னை ஓலைகள் குடிசைகளுக்கான கீற்று முடைவதற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது, வருமானம் இன்றி விவசாயிகள் முடங்கியுள்ளனர்.

அரசு நிவாரணம் வழங்குமா?

சில விவசாயிகள் தென்னை மரங்களை காப்பாற்றுவதற்காக, கடன் வாங்கி லாரிகளில் தண்ணீர் வாங்கி பாய்ச்சு வருகிறார்கள். கஜா புயலில் வேரோடு சாய்ந்து சேதமடைந்த தென்னை மரங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்கியதைபோல், தற்போது கரூர் மாவட்டத்தில் வறட்சியால் காய்ந்துப்போன தென்னை மரங்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story