ரவுடி கொலை வழக்கில் மின்வாரிய பெண் அதிகாரி உள்பட 5 பேர் கைது


ரவுடி கொலை வழக்கில் மின்வாரிய பெண் அதிகாரி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2019 4:45 AM IST (Updated: 10 July 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே ரவுடி கொலை வழக்கில் மின்வாரிய பெண் அதிகாரி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் அருகே உள்ள மேல குமரேசபுரத்தை சேர்ந்தவர் முருகையா மகன் ரஜினி (35). ரவுடியான இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் ரஞ்சித்தோடு கீழ குமரேச புரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து ரஜினியை கொலை செய்துவிட்டு ரஞ்சித்தையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதில் படுகாயமடைந்த ரஞ்சித் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ரவுடி ரஜினி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் காரில் தப்பிச்செல்வதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் போலீசார் ஒரு காரை மடக்கி பிடித்தனர். அந்த காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த குருபாகரன் (46), அவருடைய மனைவி நித்யா (40), மேல குமரேசபுரத்தை சேர்ந்த கார்த்தி (23), கைலாசபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்த சசிகுமார் (22), காட்டூர் வின் நகர் 4-வது தெருவை சேர்ந்த சுரேஷ் குமார் என்று தெரியவந்தது. மேலும் நித்யா திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. இந்த 5 பேரும் தான் ரவுடி ரஜினியை கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

ரஜினியின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கள்ள பெரம்பூர் ஆகும். அங்கு ரஜினி மீன் பண்ணை வைத்துள்ளார். ரஜினிக்கும் குருபாகரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக நட்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ரஜினியின் மீன் பண்ணையில் குருபாகரன் தன்னை ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொள்ளும்படி கூறினார். அதன் அடிப்படையில் குருபாகரனிடமிருந்து ரஜினி சிறிது சிறிதாக ரூ.3 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார்.

இந்தநிலையில் மீன் பண்ணை தொழில் நலி வடைந்தது. அதனால் குருபாகரன் தனது பங்கு தொகையை திரும்ப தருமாறு ரஜினியிடம் கேட்டார். ஆனால் ரஜினி தன்னிடம் பணம் இல்லை என்றும் வேண்டும் என்றால் தன்னிடமுள்ள காரை வைத்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறார். மேலும் தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு காரை மீட்டு கொள்வதாக கூறியுள்ளார். அதன்படி காரை குருபாகரன் எடுத்து சென்றார்.

இந்த நிலையில் குருபாகரன் ரஜினியிடம் பணம் கேட்டதற்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் அதனால் காரை கொடுத்தால் அதனை விற்று பணம் தருவதாக கூறியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் குருபாகரன் ரஜினியிடம் அந்த காரை கொடுத்துள்ளார்.

ரஜினி அந்த காரை விற்ற பின் குருபாகரனுக்கு உரிய பணத்தை கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. அத்துடன் குருபாகரனின் மனைவி நித்யாவிற்கு ரஜினி போன் செய்து தரக்குறைவாக பேசியிருக்கிறார். இது குறித்து நித்யா தனது கணவர் குருபாகரனிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த குருபாகரன், ரஜினியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று குருபாகரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரஜினியை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். ரவுடி கொலை வழக்கில் மின்சார வாரிய பெண் அதிகாரி உள்பட 5 பேர் கைதான சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story