அரசியல் கட்சி பிரமுகரை கொல்ல வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா? சீனியர் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


அரசியல் கட்சி பிரமுகரை கொல்ல வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா? சீனியர் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x
தினத்தந்தி 10 July 2019 5:15 AM IST (Updated: 10 July 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு வெடிகுண்டு வெடித்த சேதராப்பட்டு கிரிக்கெட் மைதானத்தை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அரசியல் கட்சி பிரமுகரை கொல்ல வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலம் சேதராப்பட்டு அருகே துத்திப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சேதராப்பட்டு போலீசார் துத்திப்பட்டு கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, கையில் காயமடைந்த ஒருவரை மோட்டார் சைக்கிள்களில் சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து கூடப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது கை சிதைந்த நிலையில் வாலிபர் ஒருவர் வந்ததாகவும், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

இதற்கிடையில் வில்லியனூர் அருகே உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ‘பாம்’ ரவி, அவனது கூட்டாளி வழுதாவூர் பகுதியை சேர்ந்த ரவுடி குரால் ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து உள்ளனர்.

2 வெடிகுண்டுகள் தயாரித்த நிலையில், 3–வது வெடிகுண்டை பாம் ரவி தயாரித்தார். அது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் பாம் ரவியின் வலது கை சிதைந்து போனது. உடனே அவரது கூட்டாளிகள் பாம் ரவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வெடிகுண்டு வெடித்த இடத்தை நேற்று காலை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டபாணி, மாறன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒரு மரத்தின் அடியில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பாம் ரவியின் செல்போனும் உடைந்து கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.

வெடிகுண்டு நிபுணர் மரியதாஸ் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், 2 நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றி, செயல் இழக்க செய்தனர். மேலும் அங்கு சிதறி கிடந்த வெடிகுண்டு துகள்கள் மற்றும் கூழாங்கற்கள் ஆய்வுக்காக சேகரித்தனர். மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வரும் பாம் ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. பாம் ரவியும், வழுதாவூரை சேர்ந்த பிரபல ரவுடியான குராலும் நண்பர்கள். இந்த நிலையில் குராலுக்கும், துத்திப்பட்டை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. எனவே அவரை தீர்த்துக்கட்ட ரவுடி குரால் முடிவு செய்து, பாம் ரவியின் உதவியை நாடினார்.

நாட்டு வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக நேற்று முன்தினம் பாம் ரவி, ரவுடி குரால் இருவரும் கூட்டாளிகள் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடிகுண்டு வெடித்து பாம்ரவி காயமடைந்துள்ளார். எந்த அரசியல் கட்சி பிரமுகரை கொல்ல நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது, இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story