திருப்பூரில் நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூரில் நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் நெருப்பெரிச்சல் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 29). கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(27). இருவரும் நண்பர்கள். கடந்த 17–5–2018 அன்று அப்பகுதியில் உள்ள பாரில் மது குடித்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 18–5–2018 அன்று இரவு இருவரும் சேர்ந்து மீண்டும் மது அருந்தியுள்ளனர். பின்னர் நள்ளிரவில் ராஜேந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி கார்த்திக் படையப்பா நகரில் உள்ள பாறைக்குழி பக்கம் சென்றுள்ளார். அடுத்த நாள் காலையில் கார்த்திக் பாறைக்குழி அருகே கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக ராஜேந்திரன் கல்லால் தாக்கி கார்த்திக்கை கொலை செய்தது கண்டறியப்பட்டது. பின்னர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, நண்பரை கொலை செய்த ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.