காங்கேயம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை: ஓட்டலுக்குள் புகுந்து மதுபாட்டில்களை அள்ளிய பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு


காங்கேயம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை: ஓட்டலுக்குள் புகுந்து மதுபாட்டில்களை அள்ளிய பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 July 2019 11:15 PM GMT (Updated: 12 July 2019 7:39 PM GMT)

காங்கேயம் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஓட்டலை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதோடு, திடீரென்று ஓட்டலுக்குள் புகுந்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை அள்ளினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஆண்டிபுதூர் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 3 மாதத்திற்கு முன்பு தனியார் ஓட்டல் ஒன்று தொடங்கப்பட்டது. அந்த ஓட்டலை புதுப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் நடத்தி வருகிறார். அந்த ஓட்டல் தொடங்கிய ஒரு மாத காலம் எந்த பிரச்சினையும் இல்லை. அதன்பின்னர் அந்த ஓட்டலில் டாஸ்மாக் மதுவகைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் அங்கு சோதனையிட்ட போலீசார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் சில நாட்கள் மட்டும் மது விற்பனை நிறுத்த ப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் மது வழக்கம் போல் விற்பனையை தொடங்கியதாகத் தெரிகிறது.

இங்கு கூடுதல் விலை கொடுத்து மது வகைகளை வாங்கும் மதுப்பிரியர்கள் அந்தப் பகுதியில் ரோட்டோரங்கள், பி.ஏ.பி. வாய்க்கால் ஓரங்கள், தனியார் மேய்ச்சல் நிலங்களில் அமர்ந்து போதையேற்றிக் கொள்வதோடு காலிப் பாட்டில்களை சாலைகளிலும், பி.ஏ.பி. வாய்க்கால்களிலும் போட்டு உடைத்துச் போட்டு சென்றனர். மேலும் போதை தலைக்கு ஏறியதும், ஆபாச வார்த்தைகளால் பேசுவது, ஆடைகலைந்த நிலையில் அலங்கோலமாக படுத்து கிடப்பது போன்ற செயல்களால்அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்ககள் அச்சம் அடைந்தனர். மேலும் பெண்கள் அந்த பகுதி வழியாக செல்லவே பயப்பட்டனர்.

எனவே ஓட்டலில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் மது விற்பனை தங்கு தடையின்றி நடந்தது. அது மட்டுமல்ல மதுப்பிரியர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகமானது.

இதனால் ஆத்திரம் அடைந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த ஓட்டல் முன்பு நேற்று காலை திரண்டனர். அந்த ஓட்டலை உடனே மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுத்தி ஓட்டலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் திடீரென்று ஓட்டலுக்குள் புகுந்து அங்கு விற்பனைக்கு வைத்து இருந்த மதுபாட்டில்களை அள்ளினர். பின்னர் அவற்றை பெட்டிகளோடு வெளியே கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த ஊதியூர் போலீஸ் சப் –இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இந்த ஓட்டல் திறந்த பின்னர் 24 மணிநேரமும் டாஸ்மாக் மதுவகைகள் விற்கப்பட்டு வருவதாகவும், இதனால் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு மது வாங்கி குடித்துவிட்டு போதைக்கு அடிமையாகி வருவதாகவும், எனவே இதற்கு காரணமான ஓட்டலை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அதிகாரிகளிடம் இதுபற்றி பேசுவதாக பெண்களிடம் உறுதியளித்த போலீசார் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக அந்த ஓட்டலின் உரிமையாளர் முருகேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story