தோப்புக்குள் அழைத்து சென்று இளம்பெண்ணை புகைப்படம் எடுக்க முயன்று தாக்குதல் சுயஉதவிக்குழு கடன் வழங்கும் ஊழியர் கைது


தோப்புக்குள் அழைத்து சென்று இளம்பெண்ணை புகைப்படம் எடுக்க முயன்று தாக்குதல் சுயஉதவிக்குழு கடன் வழங்கும் ஊழியர் கைது
x
தினத்தந்தி 14 July 2019 3:45 AM IST (Updated: 14 July 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே தோப்புக்குள் இளம்பெண்ணை அழைத்து சென்று அவரை புகைப்படம் எடுக்க முயன்று தாக்கிய சுயஉதவிக்குழு கடன் வழங்கும் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளப்பெரம்பூர்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மகேந்திரகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்தரசன். இவருடைய மகன் சூரஜ் (வயது25). இவர் தஞ்சையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்த்து வரும் நிறுவனம் மூலம் பல மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதைப்போல தஞ்சையில் உள்ள ஒரு மகளிர் சுய உதவிகுழுவுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் உள்ள தஞ்சையை சேர்ந்த ஒரு இளம் பெண் சூரஜிடம் கடன் வாங்கினார்.

நேற்று சூரஜுக்கு போன் செய்த அந்த பெண் மீண்டும் கடன் கேட்டார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை சூரஜ் தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு வர கூறினார். இதனால் அந்த பெண் தனது மொபட்டில் தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு வந்த பெண்ணிடம் சூரஜ் நைசாக பேசி வல்லத்துக்கு வந்தால் பணம் தருகிறேன் என கூறினார்.

இதை நம்பிய அந்த பெண் சூரஜுடன் செல்ல முடிவு செய்தார்.

கைது

இதைத்தொடர்ந்து சூரஜ் அந்த பெண்ணை அவரது மொபட்டில் வல்லம் நோக்கி அழைத்து சென்றார். தஞ்சை- திருச்சி புறவழிச்சாலையில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது திடீரென சூரஜ் மொபட்டை அருகே உள்ள தோப்புக்குள் ஓட்டி சென்றார். தோப்பில் வைத்து அவர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பெண்ணை புகைப்படம் எடுக்க முயன்றார். இதற்கு அந்த பெண் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சூரஜ் அருகே கிடந்த கட்டையை எடுத்து பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

உடனே அங்கிருந்து தப்பி ஓடி தஞ்சை- திருச்சி சாலைக்கு வந்த பெண் கூச்சலிட்டார். அவரை பின் தொடர்ந்து சூரஜ் வந்தார். இதைக்கண்ட மக்கள் வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சூரஜையும் அந்த பெண்ணையும் வல்லம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சூரஜ் கடன் தருவதாக கூறி அந்த பெண்ணை புகைப்படம் எடுக்க முயன்று தாக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சூரஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story