மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் தஞ்சையில், முத்தரசன் பேட்டி


மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் தஞ்சையில், முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 15 July 2019 4:45 AM IST (Updated: 14 July 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று, தஞ்சையில் முத்தரசன் கூறினார்.

தஞ்சாவூர்,

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்பது சாத்தியமற்ற திட்டம். மத்திய அரசு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் நாடு முழுவதும் திணிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. முன்பு தபால் துறையின் தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளில் எழுதப்பட்டு வந்தது. தற்போது இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை சம்பந்தப்பட்ட மாநில மொழிகளில் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். நாகை மாவட்டம் பொரவாச்சேரியில் மாட்டுக்கறி உடலுக்கு நல்லது என முகநூலில் பதிவு செய்தவரை ஒரு கும்பல் தாக்கி உள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஜூலை 15-ந் தேதியில் பள்ளிகளில் “நீர்பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பில் பள்ளி மாணவர் களின் பங்களிப்பு” என்ற திட்டத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மழைநீர் சேகரிப்பு நல்லது என்றாலும் காமராஜர் பிறந்தநாளில் இதனை தேர்வு செய்து அந்த திட்டத்தை செயல்படுத்தி, காமராஜர் பிறந்தநாளை கொண்டாட விடாமல் இருட்டடிப்பு செய்யும் விதத்தில் செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது.

கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின்போது பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து வருகிற 30-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட்டாக உள்ளது. பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பாரதி, மாநில நிர்வாகிகள் சந்திரகுமார், திருஞானம் ஆகியோர் இருந்தனர்.

Next Story