நெய்வேலியில், ‘லிப்ட்’ கொடுத்தவரை தாக்கி நகை, மோட்டார் சைக்கிள் பறிப்பு - வாலிபர் கைது


நெய்வேலியில், ‘லிப்ட்’ கொடுத்தவரை தாக்கி நகை, மோட்டார் சைக்கிள் பறிப்பு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 July 2019 4:15 AM IST (Updated: 14 July 2019 11:30 PM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் ‘லிப்ட்’ கொடுத்தவரை தாக்கி நகை மற்றும் அவரது மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி, 

நெய்வேலி அருகே உள்ள பெரியகோவில் குப்பத்தை சேர்ந்தவர் விஜயன்(வயது 37). சம்பவத்தன்று இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளில் நெய்வேலி டவுன்‌ஷிப்பில் ஒருவரை பார்க்க சென்றார். இந்திரா நகர் சாலையில் அவர் சென்று கொண்டிருந்த போது, அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்ற வாலிபர் ஒருவர், விஜயனிடம் ‘லிப்ட்’ கேட்டார். இதையடுத்து அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு டவுன்‌ஷிப் நோக்கி விஜயன் வந்தார்.

2-வது வட்டத்தில் உள்ள ஒரு வங்கியின் அருகே வந்த போது, திடீரென விஜயன் அணிந்திருந்த ஒரு பவுன் செயினை, அந்த வாலிபர் பறித்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். தொடர்ந்து, அந்த நபர் விஜயனை தாக்கிவிட்டு, அவரது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுவிட்டார். நகை மற்றும் மோட்டார் சைக்கிள் பறிபோனது குறித்து விஜயன் டவுன்‌ஷிப் போலீசில் புகார் செய்தார்.

இதற்கிடையே நெய்வேலி மெயின் பஜார் காந்தி சிலை அருகே, நெய்வேலி டவுன்‌ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். விசாரணையில் அவர், நெய்வேலி ஏ பிளாக் மாற்று குடியிருப்பை சேர்ந்த வெங்கடேசன்(29) என்பதும், இவர் விஜயனை தாக்கி நகை, மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு பவுன் செயின், மோட்டார் சைக்கிளையும் பறி முதல் செய்தனர்.

Next Story