அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.85 ஆயிரம் பறிமுதல்


அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.85 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 July 2019 4:15 AM IST (Updated: 17 July 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.85 ஆயிரம் சிக்கியது.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் சார்பதிவாளர் அலுவலகம் ரெயில்வே கேட் அருகே இயங்கி வருகிறது. இங்கு சார்பதிவாளராக தனசேகரன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சார்பதிவாளர் தனசேகரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் சில பத்திர எழுத்தர்களும் இருந்தனர். இதையடுத்து அந்த அலுவலகத்தை பூட்டிவிட்டு அங்கிருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அலுவலக ஆவணங்களையும் பார்வையிட்டனர்.

பின்னர் அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த கணக்கில் வராத ரூ.85 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை நேற்று இரவு 10 மணிக்கு மேலும் நீடித்தது. அப்போது கணக்கில் வராத பணம் யாருடையது என்பது குறித்தும், அந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டதா? என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்த ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.85 ஆயிரத்தை பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story