சான்றிதழ்கள் வழங்கியதில் முரண்பாடு: மாற்றுத்திறனாளி மாணவியை மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்காதது ஏன்? சுகாதாரத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
மாற்றுத்திறனாளி மாணவியை மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்காதது ஏன்? என்று விளக்கம் அளிக்க சுகாதாரத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் மகள் ஷகிலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–
நான் 5 வயதாக இருந்தபோது, ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தேன். இதனால் தற்போது மாற்றுத்திறனாளியாக உள்ளேன். நான் பிளஸ்–2 முடித்து நீட் தேர்வில் தகுதி பெற்றேன். தமிழக மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தேன். இதற்காக நெல்லையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள மண்டல மருத்துவ வாரியத்தினர் நான் 70 சதவீத மாற்றுத்திறனாளி என சான்றிதழ் வழங்கினர்.
கலந்தாய்வு விதிமுறைகளின்படி 40 முதல் 80 சதவீதம் வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கலாம். மொத்த இடங்களில் 5 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாற்றுத்திறனாளிகள் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள மண்டல மருத்துவ வாரியத்திலும் சான்றிதழ் பெற வேண்டும். அதன் அடிப்படையில் அங்கு என்னை பரிசோதித்த குழுவினர் 80 சதவீத மாற்றுத்திறனாளி என முதலில் சான்றிதழ் வழங்கினர். 2–வதாக இதே வாரியம், 85 சதவீத மாற்றுத்திறனாளி என சான்றிதழ் வழங்கினர்.
ஒரே நபருக்கு ஒரே அமைப்பு 2 விதமான சான்றிதழ் வழங்கியது வியப்பாக இருந்தது. பின்னர் நான் மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க சென்றேன். 85 சதவீத மாற்றுத்திறனாளி என அளிக்கப்பட்ட சான்றிதழ் அடிப்படையில் என்னை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இது சட்டவிரோதம். எனவே நெல்லை அரசு மருத்துவகல்லூரியில் உள்ள மண்டல மருத்துவ வாரியம் எனக்கு வழங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 40 சதவீதத்துக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க இயலாது என வரையறுக்கப்பட்டுள்ளது. அது போல் 80 சதவீதத்திற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மாணவர் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இது ஏன் என்று தெரியவில்லை.
மேலும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கியதிலும் முரண்பாடு உள்ளது. எனவே இது குறித்தும், மனுதாரரின் கோரிக்கை குறித்தும் தமிழக சுகாதாரத்துறை செயலாளரிடம் அரசு வக்கீல் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.