வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்


வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்
x
தினத்தந்தி 18 July 2019 4:30 AM IST (Updated: 17 July 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். 7 சுயேச்சை வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்தனர். இன்று(வியாழக்கிழமை) மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்

வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5–ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11–ந் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாகும்.

இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு காரில் வந்த அவர் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கதிர்ஆனந்துக்கு மாற்று வேட்பாளராக அவருடைய மனைவி சங்கீதா, தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரத்திடம் மனுதாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் பிரபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நீலசந்திரகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வந்ததும் துரைமுருகன் கூறியதாவது:–

நாங்கள் எதிரணி வேட்பாளரை பற்றி யோசிக்கவில்லை. இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மத்திய அரசுக்கு எதிரான எங்கள் கொள்கையில் மாற்றமில்லை. அதே போன்று தமிழ்நாட்டில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்பும் எண்ணத்திலும் மாற்றமில்லை என்றார்.

வேட்பாளர் கதிர்ஆனந்த் கூறுகையில் ஏற்கனவே வெற்றி பெற்ற எங்கள் எம்.பி.க்கள் 37 பேரின் செயல்பாடுகளும் நன்றாக உள்ளது. அதுவும் எங்கள் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என்றார்.

பேட்டியின் போது, ஜெகத்ரட்சகன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.காந்தி, ப.கார்த்திகேயன், வில்வநாதன், மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

5–வது நாளான நேற்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனபால், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகத்தை சேர்ந்த காட்பிரே நோபிள், அனைத்திந்திய ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் சாலமோன் மற்றும் பசுமைமோகன், சேகர், ஷாநவாஸ்கான், கதிரவன் ஆகிய 7 பேரும் சுயேச்சைகளாக வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை வேலூர் தொகுதியில் போட்டியிட மொத்தம் 29 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.


Next Story