எண்ணூரில் அனல்மின் நிலைய பணிக்கு வைத்து இருந்த 100 ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசம்; போலீஸ் விசாரணை


எண்ணூரில் அனல்மின் நிலைய பணிக்கு வைத்து இருந்த 100 ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசம்; போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 18 July 2019 4:45 AM IST (Updated: 18 July 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூரில் அனல்மின் நிலைய பணிக்காக வைத்து இருந்த 100 ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசமானது. இதனால் ஏற்பட்ட கரும்புகையால் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நாசவேலை காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவொற்றியூர்,

எண்ணூர் அனல்மின் நிலையம் சுமார் ரூ.3,250 கோடி செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு பணிகள் நிறுத்தப்பட்டது.

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் உள்ள எந்திரங்களை குளிர்விப்பதற்காக கடலுக்குள் இருந்து கடல்நீரை கொண்டு செல்லும் பணிக்காக ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் கொண்டுவரப்பட்டது.

ஆனால் பணிகள் நின்று விட்டதால் அந்த பிளாஸ்டிக் குழாய்கள் அனைத்தையும் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 10–வது தெரு அருகே உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காலி மைதானத்தில் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த ராட்சத பிளாஸ்டிக் குழாய்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதில் 10 மீட்டர் நீளமுள்ள 100–க்கும் மேற்பட்ட ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் கரும்புகையுடன் வானுயர எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டது.

இதனால் அருகில் குடியிருப்புகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பீதி அடைந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

திருவொற்றியூர், எண்ணூர், தண்டையார்பேட்டை, மணலி, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 50 குடிநீர் வாகனங்களில் 100–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து பிளாஸ்டிக் குழாய்களில் எரிந்த தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.

ஆனால் 100–க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் ஒரே நேரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். அதே நேரத்தில் திடீரென்று மழை பெய்ததால் படிப்படியாக போராடி அதிகாலை 5 மணிக்கு தீயணைப்புத்துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். எனினும் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

மேலும் இந்த தீ விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், வடிவேலு உள்பட பலரது வீடு மற்றும் குடிசைகள் எரிந்து நாசமானது. வெப்பம் தாளாமல் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள், ஏ.சி. எந்திரங்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் எரிந்து போனது. அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கும் தீ பரவியது.

இதனால் பள்ளிகளின் சுவர் முழுவதும் கரும்புகை ஒட்டியது. இதனால் நேற்று அருகில் உள்ள 2 பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தீவிபத்தில் அருகில் உள்ள மரங்களும் தீயில் கருகின. தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டை விட்டு வெளியேறிய பொன்னுசாமி என்பவர் வீட்டில் இருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை யாரோ திருடிச்சென்று விட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமூக விரோதிகள் யாராவது பிளாஸ்டிக் குழாய்களுக்கு தீ வைத்து எரித்து நாச வேலையில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story