பாம்பனில் இருந்து சென்று சூறாவளி காற்றில் படகு உடைந்து மணல்திட்டில் ஒதுங்கிய 8 மீனவர்கள்; இலங்கை கடற்படையிடம் சிக்கியவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது


பாம்பனில் இருந்து சென்று சூறாவளி காற்றில் படகு உடைந்து மணல்திட்டில் ஒதுங்கிய 8 மீனவர்கள்; இலங்கை கடற்படையிடம் சிக்கியவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது
x
தினத்தந்தி 19 July 2019 11:30 PM GMT (Updated: 19 July 2019 10:14 PM GMT)

சூறாவளி காற்றில் படகு உடைந்து இலங்கைக்கு சொந்தமான மணல் திட்டில் கரை ஒதுங்கிய பாம்பன் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்ய முயன்றது. ஆனால், இந்திய கடலோர காவல் படை அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பாம்பன் பகுதியில் உள்ள குந்துகால் கடற்கரையில் இருந்து கடந்த 17–ந் தேதி இன்னாசி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பாக்கியம், கபிலன், காட்வின், டென்னிசன், நூர்தீன், பக்ருதீன், ஜெயசீலன், நாகராஜ் ஆகிய 8 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.

படகிலேயே 2 அல்லது 3 நாள் வரை தங்கியிருந்து மீன் பிடித்து வரும் ஏற்பாட்டுடன் சென்றிருந்த அந்த மீனவர்கள், தனுஷ்கோடி அருகே உள்ள இந்திய கடல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்பாக மாறியதால், படகின் பலகை உடைந்து சேதம் அடைந்தது. இதனால் அந்த படகு கடலில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

பின்னர் படகானது காற்றின் வேகத்தால் 8 மீனவர்களுடன் நடுக்கடலில் உள்ள மணல் திட்டு பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்டு கரை ஒதுங்கியது. இதுபற்றி பாம்பன் பகுதியில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களை தொடர்புகொண்டு, அந்த மீனவர்கள் தகவல் தெரிவித்து, தங்களை காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளனர். அதை தொடர்ந்து பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினருக்கு தெரிவித்து, மீனவர்களை மீட்டுவர கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதை தொடர்ந்து, 2 ஹோவர் கிராப்ட் கப்பலில் இந்திய கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, தனுஷ்கோடி அருகே உள்ள இந்திய கடல் எல்லையான 5–வது மணல் திட்டு வரை சென்றனர். ஆனால் மீனவர்கள் படகுடன் தஞ்சம் அடைந்திருந்தது, இலங்கை கடல் பகுதியான 7–வது மணல் திட்டு என தெரியவந்ததால் இந்திய கடல் எல்லையை தாண்டி செல்ல முடியாத நிலை உருவானது. பின்னர் கடலோர காவல் படையினர் இந்திய எல்லை பகுதியிலேயே கப்பலை நிறுத்தி, மீனவர்களை கண்காணித்தனர்.

இதற்கிடையே அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 7–வது மணல் திட்டில் படகுடன் கரை ஒதுங்கியிருந்த 8 மீனவர்களிடமும் விசாரணை நடத்தினர். இலங்கை கடற்படையினரிடம், இந்திய கடலோர காவல் படையினர் பேச்சுவார்த்தை நடத்தி 8 மீனவர்களையும் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதை ஏற்று 8 மீனவர்களும் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்னர் கடலோர காவல் படையினர் 8 மீனவர்களையும் நேற்று மதியம் 1.30 மணி அளவில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை முகாமுக்கு அழைத்து வந்தனர்.

8 மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படை நிலைய கண்காணிப்பாளர் மணிக்குமார், மீன்வள துறை துணை இயக்குனர் காத்தவராயன், நாட்டுப் படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் ஆகியோர் வரவேற்றனர். மீனவர்கள் மீட்பு குறித்து மண்டபம் கடலோர காவல்படை நிலைய கண்காணிப்பாளர் மணிக்குமார் கூறியதாவது:–

பாம்பனிலிருந்து மீன்பிடிக்க சென்று கடல் அலையில் சிக்கி படகு சேதமாகி 8 மீனவர்களும் இலங்கை பகுதியான 7–வது மணல் திட்டு பகுதியில் கரை ஒதுங்கினார்கள். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்து அழைத்து செல்வதாக வாக்கி டாக்கி மூலமாக தெரிவித்தனர். உடனடியாக நாங்களும் வாக்கி டாக்கி மூலம் 8 பேரும் உண்மையிலேயே மீன் பிடிக்க வந்த பாம்பன் மீனவர்கள் என்றும், படகு சேதமானதால் உயிரை காப்பாற்றவே இலங்கை பகுதியில் உள்ள மணல் திட்டு பகுதியில் தஞ்சம் அடைந்தனர் என்றும் தெரிவித்தோம். மீனவர்களை கைது செய்யாமல் இந்திய கடலோர காவல் படையிடமே ஒப்படைக்க வேண்டும் என பேசினோம். அதை ஏற்று இலங்கை கடற்படையினர் அந்த 8 மீனவர்களையும் படகுடன் எங்களிடமே ஒப்படைத்துவிட்டனர்.

இவவாறு அவர் கூறினார்.

இந்திய கடலோர காவல் படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு, மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.


Next Story