கைதான 5 பேர் குறித்து விசாரணை நடத்த மதுரை, ராமநாதபுரத்துக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்; கலெக்டர்–போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை


கைதான 5 பேர் குறித்து விசாரணை நடத்த மதுரை, ராமநாதபுரத்துக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்; கலெக்டர்–போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 19 July 2019 11:00 PM GMT (Updated: 19 July 2019 10:14 PM GMT)

கைதான அன்சாருல்லா இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் குறித்து மதுரையிலும், ராமநாதபுரம் மாவட்டத்திலும் விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் நேற்று கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்தினர்.

ராமநாதபுரம்,

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் டெல்லியில் பதுங்கியிருந்த அன்சாருல்லா இயக்கத்தை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த 4 பேரும், வாலிநோக்கம் தனிச்சியம் பகுதியை சேர்ந்த ஒருவரும், மதுரையை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். இவர்கள் 14 பேரும் அன்சாருல்லா இயக்கத்தில் ஈடுபட்டு ஏற்கனவே வெளிநாட்டில் இருந்தபடி, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரின் வீடுகளிலும், அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று ராமநாதபுரம் வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்த அந்த அதிகாரிகள், மாவட்டத்தில் நடத்த உள்ள சோதனை, விசாரணைக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான உதவிகளை கோரினர். மேலும், ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவை சந்தித்து விசாரணைக்கு வருவாய்த்துறை சார்பில் தேவைப்படும் உதவிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

இதன்பின்னர் அதிகாரிகள் குழுவினர் விசாரணைக்காக புறப்பட்டு சென்றனர். கீழக்கரை, வாலிநோக்கம் மட்டுமல்லாது வேறு சில பகுதிகளுக்கும் சென்று விசாரணையை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஓரிரு நாட்கள் தங்கியிருந்து இந்த விசாரணையை நடத்த உள்ளதாக போலீஸ் வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே ‘வாட்ஸ்அப்’ குழு மூலம் இயங்கிய கும்பல் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது, அன்சாருல்லா இயக்கம் தொடர்பாக விசாரணைக்காக வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ள மதுரையை சேர்ந்தவர் பற்றி விசாரணை செய்வதற்காக அந்த அமைப்பின் அதிகாரிகள் நேற்று காலை மதுரை வந்தனர். அவர்கள் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்தித்து பேசினர். கைது செய்யப்பட்டவர் மீது மதுரையில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் ஏதும் உள்ளதா, அவர் வேறு எந்த இயக்கத்துடன் தொடர்பில் இருக்கிறாரா? என்பது குறித்து கேட்டறிந்தனர்.

அதைத் தொடர்ந்து, கைதானவர் வீடு உள்ள பகுதியை தேசிய புலனாய்வு முகமையினர் சென்று பார்வையிட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story