கொள்ளிடம் ஆற்றில், மணல் திருட்டை தடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


கொள்ளிடம் ஆற்றில், மணல் திருட்டை தடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம்,

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் மணல் குவியல் உள்ளது. தற்போது கொள்ளிடம் அருகே பனங்காட்டாங்குடியில் இருந்து காட்டூர் வரை 20 கி.மீட்டர் வரை கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் மணல் உள்ளது. அப்பகுதி விவசாயிகள் நிலத்தடிநீரை பாதுகாக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் அல்லாமல் பாதுகாத்து வந்தனர்.

இந்த நிலையில் பனங்காட்டாங்குடி, கொண்ணக்காட்டுபடுகை, மாதிரவேளூர், பாலுரான்படுகை, சரஸ்வதி விளாகம், திட்டுபடுகை, சந்தப்படுகை, முதலைமேடு திட்டு, அளக்குடி ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் தினமும் இரவு நேரங்களில் அதிக அளவில் மணல் திருடப்பட்டு வருகிறது. இதற்காக ஆற்றின் கரையோரம் ஆங்காங்கே மணலை குவித்து வைத்து திருடி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் மணல் இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் தற்போது சீரானநிலையில் உள்ளது. இதற்கிடையே பழையார் கடலில் இருந்து வரும் உப்புநீர் மாதிரவேளூர் வரை கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இதனால் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் நிலத்தடிநீர் உப்புநீராக மாறி உள்ளது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் இரவு நேரங்களில் மணல் திருடுவதால் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

இதுகுறித்து பொதுப்பணித்துறையிடம் தகவல் தெரிவித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே, கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story