மதுரை அருகே கள்ளக்காதலனை கொலை செய்து எரித்த பெண் கைது; தற்கொலை நாடகம் நடத்தியது அம்பலம்
மதுரை அருகே கள்ளக்காதலனை கொலை செய்து எரித்து தற்கொலை நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்,
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பணன். இவருடைய மகன் வெயில்முத்து (வயது 22). இவர் 7–வது வகுப்பு வரை படித்துவிட்டு அவ்வப்போது கிடைக்கின்ற வேலை செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் மணிகண்டராஜா. இவருடைய மனைவி விருதுநகரை சேர்ந்த காளீஸ்வரி(29). இவர்களுக்கு தனலட்சுமி(11), தேவதர்ஷினி(9) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டராஜா இறந்து விட்டார். இதனால் காளீஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் டி.கல்லுப்பட்டியில் உள்ள ராமுன்னி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக காளீஸ்வரிக்கும், வெயில்முத்துவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து காளீஸ்வரி வீட்டிலேயே வெயில்முத்து தங்கினார். மேலும் வெயில்முத்துவிற்கு கஞ்சா, மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் காளீஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வெயில்முத்து அடிக்கடி சண்டை போடுவாராம். சம்பவத்தன்று காளீஸ்வரிக்கும், வெயில்முத்துவிற்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் காளீஸ்வரியை வெயில்முத்து அடித்து உள்ளார். வெயில்முத்து அதிகமாக மது குடித்துவிட்டு வந்ததால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வெயில்முத்து கீழே விழுந்துவிட்டார். கீழே விழுந்த வெயில்முத்துவை காளீஸ்வரி சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார்.
பின்னர் வெயில்முத்து உடலை வீட்டிற்குள் இருந்த மெத்தையில் போட்டு மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டார். சரியாக எரியாததால் வீட்டிற்கு வெளியே இருந்த புதரில் அரைகுறையாக எரிந்த உடலை மூடி வைத்துவிட்டு தனது வீட்டில் எந்த சம்பவமும் நடக்காதது போன்று இயல்பாக இருந்துள்ளார். மேலும் டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையம் சென்று வெயில்முத்து எனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனால் அவருடைய உடலை கீழே இறக்கி எரித்துவிட்டேன் என கூறி உள்ளார். உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், இன்ஸ்பெக்டர் விஜயகாண்டிபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். தடயவியல் உதவி இயக்குனர் பெருமாள் தடயங்களை பதிவு செய்தார்.
அப்போது வெயில்முத்து சாவில் சந்தேகம் அடைந்த போலீசார், காளீஸ்வரியிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், வெயில்முத்து என்னிடம் அடிக்கடி குடித்துவிட்டு சண்டை போடுவார். தகராறில் வெயில்முத்துவை கொலை செய்து விட்டு எரித்து வீட்டிற்கு வெளியே உள்ள புதரில் போட்டுவிட்டேன் என்று கூறினார்.
இதுகுறித்து வெயில்முத்து தந்தை கருப்பணன் டி.கல்லுப்பட்டி போலீசில் அளித்த புகாரில், எனது மகன் கொலையை காளீஸ்வரி மட்டும் செய்து இருக்க வாய்ப்பு இல்லை. வேறு ஆட்களின் உதவியுடன் சேர்த்து கொலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார். போலீசாரும் இதுகுறித்து கொலை மற்றும் தடயத்தை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காளீஸ்வரியை கைது செய்தனர்.
மேலும் வேறு யாருக்காவது இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்களா என்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலனை கள்ளக்காதலியே கொலை செய்த சம்பவம் டி.கல்லுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.