ஆசனூர் அருகே தொழிலாளியை துதிக்கையால் யானை தூக்கி வீசியது; படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஆசனூர் அருகே தொழிலாளியை யானை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேவசாமி (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக ஆசனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னர் வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் மீண்டும் அரேபாளையத்துக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். வனத்துறை சோதனைச்சாவடி அருகே வந்த போது புதர்மறைவில் நின்ற யானை ஒன்று, மாதேவசாமி ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் முன்பு திடீரென வந்தது.
பின்னர் அந்த யானை, அவரை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் அவர் அங்குள்ள ஒரு புதருக்குள் விழுந்தார். இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் யானை, அவரை நோக்கி வேகமாக ஓடிவந்தது.
அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் யானை நடுரோட்டில் நிற்பதை பார்த்து ஒலி எழுப்பினார்கள். இதனால் யானை, அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதன்பின்னர் வாகன ஓட்டிகள், யானை தூக்கி வீசியதில் படுகாயம் அடைந்த மாதேவசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மாதேவசாமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.