கல்குவாரிகளை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கல்குவாரிகளை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 July 2019 11:08 PM GMT (Updated: 22 July 2019 11:08 PM GMT)

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் இருந்தே திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். இந்த நிலையில் நத்தம் தாலுகா வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்கள் பகுதியில் ஏற்கனவே 2 கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உரிய அனுமதியின்றி 3-வதாக ஒரு குவாரி தொடங்கப்பட்டுள்ளது. அந்த குவாரியில் அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்களை பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுகின்றன.

அப்போது சிதறி விழும் கற்களால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைகின்றன. அத்துடன் அதிக அளவில் தூசியும் பறந்து காற்றில் கலக்கிறது. இதன் காரணமாக எங்களின் குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. கண்பார்வையும் பாதிக்கப்படுகிறது. மேலும் கல்குவாரியில் இருந்து வெளியேற்றப்படும் வெடிமருந்து கலக்கப்பட்ட தண்ணீரை குடிக்கும் ஆடு, மாடுகளும் இறந்துவிடுகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 13-ந்தேதி எங்கள் பகுதியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.

பின்னர் ஓரிரு நாட்களில் அங்குள்ள கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை மூடப்படவில்லை. மேலும் புதிதாக தொடங்கப்பட்ட குவாரியின் உரிமையாளர்கள் எங்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். எனவே எங்கள் பகுதியில் உள்ள குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். அதையடுத்து கிராம மக்கள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் அது தொடர்பாக மனு அளிக்கும்படி போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story