வடதண்டலம் கிராமத்தில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


வடதண்டலம் கிராமத்தில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 July 2019 10:45 PM GMT (Updated: 23 July 2019 8:59 PM GMT)

வடதண்டலம் கிராமத்தில் சீரான குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்யாறு,

செய்யாறு தாலுகா வடதண்டலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என்றும், சில தெருக்களுக்கு 2 வாரங்களுக்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றும் கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் செய்யாறில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், சில தெருக்களுக்கு மட்டும் அதிகநேரம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் எங்கள் பகுதியில் வாரக்கணக்கில் சில தெருக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. அப்படியே குடிநீர் வந்தாலும் 2 குடங்களுக்கு மேல் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றனர்.

மின்மோட்டார் மூலம்...

இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, ஊராட்சி செயலாளர் சிவாவிடம் விசாரித்தபோது, பொதுமக்கள் குழாய் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி நீரினை உறிஞ்சுவதால் மேடான பகுதியில் உள்ள தெருக்களுக்கு தண்ணீர் சென்றடைவது சிரமமாக உள்ளது. மேலும் பொதுமக்கள் முறைகேடாக தெருக்களில் பள்ளம் தோண்டி வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுத்துள்ளனர். இவ்வாறு சுமார் 300 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மெயின் பைப் லைனிலும் 15-க்கும் மேற்பட்ட இணைப்புகள் கொடுத்துள்ளனர் என்றார்.

அதைத்தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் முறைகேடான இணைப்புகளை துண்டிக்கவும், மின்மோட்டார் பொருத்தியுள்ளதை அகற்றவும் நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாக்குவாதம்

முன்னதாக அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் முனுசாமி என்பவர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் மறியலை கைவிட்டு கலைந்து போங்கள் என்றார். இதனால் அவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

குழாய் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி நீரினை உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். எனவே, மின்மோட்டார்கள் பறிமுதல் செய்வதுடன், சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீதும், முறைகேடாக குழாய் இணைப்பு கொடுத்துள்ள வீட்டின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி தெரிவித்தார். 

Next Story