மயிலாடுதுறை அருகே காரை ஏற்றி தொழிலாளி கொலை மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு


மயிலாடுதுறை அருகே காரை ஏற்றி தொழிலாளி கொலை மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 July 2019 3:45 AM IST (Updated: 25 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே காரை ஏற்றி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மணல்மேடு,

நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள உக்கடை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது52). தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி மணல்மேடு அருகே உள்ள நாராயணமங்கலம் மெயின் ரோடு பகுதியில் தலைநசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அருகே அவர் ஓட்டிச்சென்ற மொபட்டும் கிடந்தது.

மேலும் சிறிது தூரத்தில் உள்ள புளிய மரத்தில் ஒரு கார் மோதிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து ராஜகோபாலின் உறவினர் தமிழ்காவலன் (50) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சித்தமல்லி பகுதியில் மணல்மேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பட்டவர்த்தியை சேர்ந்த ராஜேஷ் (32), சேத்தூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவசிதம்பரம் (23) என்பது தெரியவந்தது.

இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும், ராஜகோபால் சாவுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதும், கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜகோபால் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரிடமும் நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து மணல்மேடு போலீசார் கூறியதாவது:-

மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் அமீர்ஹைதர்கான் (53). இவருக்கும் ராஜகோபால் மனைவி ஷீலாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.

இது தெரியவந்ததால், அமீர்ஹைதர்கான் மனைவி பரமேஸ்வரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல அமீர்ஹைதர்கானின் மகனும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

அமீர்ஹைதர்கான்-ஷீலா ஆகியோரின் கள்ளக்காதல் ஷீலாவின் கணவர் ராஜகோபாலுக்கும் தெரிந்துள்ளது. அமீர்ஹைதர்கானின் சொத்துகளுக்கு ராஜகோபால் பினாமியாக இருந்து வந்தார்.

சமீபகாலமாக ராஜகோபால், அமீர்ஹைதர்கானின் பேச்சுக்கு கட்டுப்படவில்லை. மேலும் ஷீலாவை, அமீர்ஹைதர்கானிடம் இருந்து பிரிக்க திட்டமிட்டுள்ளார். இதனால் கூலிப்படையினர் மூலம் அமீர்ஹைதர்கான், ராஜகோபால் மீது காரை ஏற்றி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், சிவசிதம்பரம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அமீர்ஹைதர்கான் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story