பெண் போலீஸ் தற்கொலை விவகாரம்: துணை சூப்பிரண்டை வெகுதொலைவுக்கு இடமாற்றிவிட்டு பாலியல் புகாரை விசாரிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


பெண் போலீஸ் தற்கொலை விவகாரம்: துணை சூப்பிரண்டை வெகுதொலைவுக்கு இடமாற்றிவிட்டு பாலியல் புகாரை விசாரிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 25 July 2019 5:00 AM IST (Updated: 25 July 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் துணை சூப்பிரண்டு மீது நடவடிக்கை கோரிய வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சம்பந்தப்பட்ட துணை சூப்பிரண்டை வெகுதொலைவுக்கு இடமாற்றம் செய்துவிட்டு, அவர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மதுரை,

அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எனது மனைவி பேரையூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றினார். அந்த சமயத்தில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ரவிச்சந்திரன், எனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்தார். இந்தநிலையில் கடந்த 3.9.2013 அன்று எனது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது இறப்புக்கு ரவிச்சந்திரன் தான் காரணம். ஆனால் என் மனைவியின் இறப்புக்கு நாங்கள்தான் காரணம் என பேரையூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதை விசாரித்த ஐகோர்ட்டு, என் மனைவி தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது. ஆனால் ரவிச்சந்திரனின் தலையீட்டால் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த வழக்கை காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் மனைவி இறந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ரவிச்சந்திரனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள காவல் துறையினருக்கான பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவும் தனியாக விசாரித்து வருகிறது“ என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பது அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறைக்கான பாலியல் புகார்களை விசாரிக்கும் அதிகாரி வனிதா, பேராசிரியர் ஜெயனென்ட் வசந்தகுமாரி, வக்கீல் ஷீலா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயமணி, பாக்கியலெட்சுமி ஆகியோர் கொண்ட குழுவில் ஐகோர்ட்டு வக்கீல் என்.கிருஷ்ணவேணியும் சேர்க்கப்படுகிறார்.

இந்தக்குழு போலீஸ் துணைசூப்பிரண்டு ரவிச்சந்திரன் மீதான புகார் குறித்த விசாரணையை 2 வாரத்தில் தொடங்கி, 6 மாதத்தில் முடிக்க வேண்டும். போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பணியாற்றினால் விசாரணை முறையாக நடக்காது. எனவே விசாரணை முடியும் வரை அவரை மதுரையில் இருந்து வெகுதொலைவுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story