ஆன்-லைன் வர்த்தகத்தை எதிர்த்து டெல்லியில் மாநாடு நடத்தப்படும் விக்கிரமராஜா தகவல்


ஆன்-லைன் வர்த்தகத்தை எதிர்த்து டெல்லியில் மாநாடு நடத்தப்படும் விக்கிரமராஜா தகவல்
x
தினத்தந்தி 25 July 2019 11:00 PM GMT (Updated: 25 July 2019 7:06 PM GMT)

ஆன்-லைன் வர்த்தகத்தை எதிர்த்து டெல்லியில் மாநாடு நடத்தப்படும் என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.

கொள்ளிடம்,

கொள்ளிடம் கடைவீதியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கொடியேற்றுவதாக இருந்தது. அதன்படி பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கொள்ளிடத்திற்கு வந்தார். ஆனால் சங்க கொடியேற்றுவதற்கு கொள்ளிடம் போலீசார் அனுமதி மறுத்தனர்.

வியாபாரிகள் சங்க கூட்டம்

இதனை தொடர்ந்து கொள்ளிடத்தில் வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கமாலுதீன் முன்னிலை வகித்தார். இதில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பல இடங்களில் வணிகர் சங்க கொடியை ஏற்றி வைத்துவிட்டு வந்தேன். ஆனால் கொள்ளிடத்தில் கொடியேற்றுவதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளார்கள். இது ஏனென்று தெரியவில்லை. சாதாரண தெருவோர சிறு வியாபாரிகள் கூட உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ரூ.100 கொடுத்து லைசென்ஸ் வாங்க வேண்டும். அவ்வாறு லைசென்ஸ் பெறாத வியாபாரிகள் மீது ரூ.5 லட்சம் அபராதமும், 6 மாதம் ஜெயில் தண்டனையும் வழங்குவதாக சட்டம் உள்ளது. இது சிறு-குறு வியாபாரிகளை பாதிப்பதாக உள்ளது. மேலும் ஆன்-லைன் வர்த்தகத்தால் சிறு-குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனை உங்களது ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை கொண்டு தான் தடுக்க முடியும். ஆன்-லைன் வர்த்தகத்தை எதிர்த்து டெல்லியில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பேரமைப்பின் நாகை மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், கொள்ளிடம் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story