வழக்குகளுக்கான தீர்வு கூட்டத்தில் காணாமல் போன 2 பேர் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு


வழக்குகளுக்கான தீர்வு கூட்டத்தில் காணாமல் போன 2 பேர் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 26 July 2019 4:15 AM IST (Updated: 26 July 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளுக்கான தீர்வு கூட்டத்தில், 2 பேர் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குன்னம்,

காணாமல் போனவர்கள் பற்றி போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், இறந்து போன அடையாளம் தெரியாதவர்களின் விவரங்களை, புகார்தாரரிடம் படத்துடன் விளக்கி காண்பிக்கும் தீர்வு கூட்டம், பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் குன்னம் அருகே உள்ள ஒரு மகாலில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசுகையில், திருச்சி சரக போலீசுக்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகரம், திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போய் அடையாளம் தெரியாமல் இறந்தவர் வழக்குகளில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 926 வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன, என்றார்.

80 புகார்தாரர்கள்

இதையடுத்து இறந்தவர் புகைப்படத்தை புரொஜக்டர் மூலமாக திரையில் பெரிதாக காண்பித்து ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய புகார் கொடுத்த 80 புகார்தாரர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, இறந்தவரின் புகைப்படத்தை காண்பித்தும், அவரது அங்க அடையாளம், உடை மற்றும் எங்கு இறந்தார் என்ற விவரத்துடன் ஒப்பிட்டு காண்பிக்கப்பட்டது. புகார்தாரர்கள் போலீசாரால் காண்பிக்கப்பட்ட பட விளக்கத்தில் உறவினர்கள் இறந்தது பற்றி தெரிந்து கொண்டு காவல்துறையிடம் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ரவீந்திரன் (பெரம்பலூர்), தேவராஜ், (மங்களமேடு), குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட போலீஸ் நிலையங்களின் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காணாமல் போன 2 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் காணாமல் போய் அடையாளம் தெரியாமல் இறந்த ஒருவர் பற்றிய அடையாளம் தெரியவந்தது.

Next Story