குடிமராமத்து பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவு


குடிமராமத்து பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவு
x
தினத்தந்தி 25 July 2019 11:00 PM GMT (Updated: 25 July 2019 9:41 PM GMT)

குடிமராமத்து பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள உள்ள பாசனதாரர் சங்கத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு குடிமராமத்து பணிகளை மேற்கொள்வது குறித்த விளக்ககூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

2019-2020-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளவும், மேட்டூர் அணைக்கோட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தனி வங்கி கணக்கு

குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளும் பாசனதாரர் சங்கத்தினர் அதற்கு என தனி வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும். பாசனதாரர் சங்கங்கள் தங்கள் பகுதியில், தாங்கள் எந்த வங்கியில் கணக்கு பாராமரிக்க விரும்புகின்றீர்களோ அந்த வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ளலாம். இதற்காக வங்கியாளர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதற்கான தொகையானது, பாசனதாரர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும்.

எனவே பாசனதாரர்கள் சங்கத்தினர் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய குடிமராமத்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதன் மூலம் பணிகளை மேற்கொள்ளும் பாசனதாரர்களின் விவசாய நிலங்களே, பயன்பெற உள்ளதால் விவசாயிகள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணிகளை குறித்த காலத்தில் முடிக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சப்-கலெக்டர் கிராந்தி குமார், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் கவுதமன் உள்பட அரசு அலுவலர்கள், பாசனதாரர் கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story