பால்கர் மாவட்டத்தில் ஒரே இரவில் 4 முறை நிலநடுக்கம் ; வீடு இடிந்து ஒருவர் சாவு
பால்கர் மாவட்டத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடு இடிந்து ஒருவர் உயிரிழந்தார்.
வசாய்,
நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் என்ற பெருமையை பெற்றிருந்த தானேயில் இருந்து பிரிந்து புதிதாக உதயமானது பால்கர் மாவட்டம். இந்த மாவட்ட மக்களை கடந்த ஆண்டு முதல் ‘நிலநடுக்கம்' என்ற இயற்கை பேரிடர் அச்சுறுத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரே நாளில் 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மாவட்டத்தில் 45 இடங்களில் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1 வரையிலும் பதிவானது.
அப்போது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த போது அப்பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை ஒன்று சுவரில் மோதி உயிரிழந்தது.
அதன்பின்னரும் அவ்வப்போது நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பால்கர் மாவட்ட மக்கள் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடனே கழித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை தகானு, தலசாரி, பொய்சர் பகுதிகளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.03 மணியில் இருந்து 1.15 மணிக்குள் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 3.8, 3.6, 2.9 மற்றும் 2.8 ஆக பதிவாகின. அப்போது வீடுகள் பயங்கரமாக அதிர்ந்தன.
அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். தகானுவில் உள்ள வசல்பாடா பகுதியில் ரிஸ்யா மெக்வாலே (வயது55) என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி அவர் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இரவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது மழையும் பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்த மக்கள் மழையில் நனைந்தபடி மீண்டும் வீட்டிற்குள் செல்ல பயந்து தெருக்களிலும், சாலைகளிலும் பீதியுடனும், துயரத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்து போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அந்த பகுதிகளுக்கு விரைந்து வந்தனர். போலீசார் வீடு இடிந்து பலியான ரிஸ்யா மெக்வாலேயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பால்கர் மாவட்ட கலெக்டர் கைலாஷ் ஷிண்டேயின் உத்தரவின் பேரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதுபற்றி தகானு தாசில்தார் ராகுல் சரங் கூறுகையில், ‘பால்கர் மாவட்டத்தில் நேற்று முதல் (நேற்று முன்தினம்) 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. துன்டல்வாடி கிராமத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள தகானு மற்றும் தலசாரி தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்’ என்றார்.
பால்கரில் ஒரே இரவில் 4 முறை நிகழ்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தகானு, தலசாரி தாலுகாக்களில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கண்காணித்து வருவதாக கலெக்டர் கைலாஷ் ஷிண்டே கூறினார்.
Related Tags :
Next Story