எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பாதுகாப்பான ரத்ததானத்துக்கு வல்லுனர் குழுவை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்தது.
மதுரை,
மதுரையை சேர்ந்த அப்பாஸ் மந்திரி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுடன் ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் தானமாக பெற்ற ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது தான், இதற்கு காரணம். பெரும்பாலான ரத்த மையங்களில் பணியாளர்கள் கிடையாது. எனவே பாதுகாப்பான முறையில் ரத்தம் பெற உபகரணங்களை வழங்கவும், தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில் கூறியிருந்ததாவது:–
எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். அதில் 10 லட்ச ரூபாயை அந்த பெண்ணின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மீதம் உள்ள 15 லட்ச ரூபாயை மைனர்களான அவருடைய 2 பெண் குழந்தைகள் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும். அவர்கள் மேஜரான பின்பு இந்த தொகையை எடுத்துக் கொள்ளும்படியாக டெபாசிட் செய்யப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 450 சதுர அடிக்கு குறையாமல் 2 படுக்கை அறைகளை கொண்டதாகவும், சுற்றுச்சுவருடனும் கூடிய வீடு கட்டித்தர வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வக தொழில்நுட்பனர், ரத்த வங்கி தொழில்நுட்பனர், செவிலியர்கள் பணியிடங்களுக்கு ஊழியர்களை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக நிபந்தனைகள் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள ரத்த வங்கிகள், ஏ.ஆர்.டி. மையங்களை முறையாக கண்காணிக்க வேண்டும். அவற்றின் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளனவா? அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்கிறார்களா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
ரத்ததானம் வழங்குதல், பெறுதலை பாதுகாப்பானதாக மேற்கொள்ள வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். எச்.ஐ.வி. பாதித்தவர்களை ஆற்றுப்படுத்துதல் தொடர்பாக உரிய பயிற்சி அளித்து, அதற்குரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை வருகிற ஜனவரி மாதம் 11–ந் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.