கொள்ளை போன ஒரு மாதத்துக்கு பிறகு 3 ஐம்பொன் சிலைகளை கோவில் வாசலிலேயே போட்டுச்சென்ற கொள்ளையர்கள்
ஒரு மாதத்துக்கு முன்பு பெருமாள் கோவிலில் கொள்ளையடித்த 3 ஐம்பொன் சிலைகளை அந்த கோவில் வாசலிலேயே கொள்ளையர்கள் போட்டுச் சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கரியமாணிக்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கடந்த மாதம் 18–ந் தேதி 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, 50 கிலோ எடையுள்ள கரியமாணிக்க பெருமாள் சிலை, தலா 20 கிலோ எடையுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றனர். மேலும் சாமி சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்கச்சங்கிலியும் கொள்ளை போனது.
இதுகுறித்து அர்ச்சகர் சீனிவாசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் அப்பகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கொள்ளை போன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 ஐம்பொன் சிலைகளும் கோவில் வாசலில் கிடந்தன. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அந்த 3 சிலைகளும், இடைக்காட்டூர் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் இருந்து கொள்ளை போனவையா? என்று விசாரணை நடத்தினர். பின்னர் அவை, கரியமாணிக்க பெருமாள் கோவில் சிலைகள்தான் என்று நிர்வாகிகள், அர்ச்சகர்கள் உறுதிபடுத்தினர். இதையடுத்து அந்த சிலைகள் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
கோவிலில் கொள்ளையடித்த சிலைகளை மீண்டும் கோவில் வாசலில் கொள்ளையர்கள் போட்டுவிட்டு சென்றாலும், அந்த கொள்ளையர்கள் யார்? என்பது குறித்தும், கொள்ளை போன சாமி நகைகள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரியமாணிக்க பெருமாள் கோவிலில் கொள்ளை போன சிலைகள் திரும்ப கிடைக்க வேண்டும் என பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் வேண்டிவந்தனர். இந்த நிலையில் கோவில் வாசலில் ஐம்பொன் சிலைகளை மீண்டும் கொள்ளையர்கள் போட்டுச் சென்றது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிசயம் பெருமாளின் அருளால்தான் நடந்தது என அவர்கள் தெரிவித்தனர். சிலைகளை விரைவாக மீண்டும் கோவிலுக்கு கொண்டு வந்து பூஜைகளை நடத்தி பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.