தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை-பேச்சு போட்டிகள் அதிகாரி தகவல்


தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை-பேச்சு போட்டிகள் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 29 July 2019 3:45 AM IST (Updated: 29 July 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது என கரூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அன்புச்செழியன் தெரிவித்துள்ளார்.

கரூர்,

தமிழக பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பேச்சுத்திறன், படைப்புத் திறனை வெளிக்கொணரும் பொருட்டு தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வருகிற ஆகஸ்டு 7-ந் தேதி கரூர் காந்திகிராமம் புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வருகிற ஆகஸ்டு 9-ந் தேதி தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி கலையரங்கிலும் நடத்தப்பட இருக்கின்றன.

பரிசுத்தொகை

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளின் தலைப்புகள் சென்னை தமிழ்வளர்ச்சி இயக்குநரிடமிருந்து அனுப்பப்படும். போட்டி நடைபெறும்போது நடுவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்ட உறைகள் உடைக்கப்பட்டு போட்டிக்கான தலைப்புகள் அறிவிக்கப்படும். இந்த போட்டிகளை நடத்துவதற்கு பள்ளிகளுக்கு தமிழாசிரியர்களும், கல்லூரிகளுக்கு தமிழ்ப்பேராசிரியர்களும் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளனர். போட்டிகள் முடிவுற்றபின்னர் உடனடியாக வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு போட்டிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி வாரியாக முதல்பரிசு ரூ.10,000-ம், இரண்டாம் பரிசு ரூ.7,000-ம், மூன்றாம் பரிசு ரூ.5,000-ம் பரிசுத்தொகையாக மாவட்ட கலெக்டர் அன்பழகன் வழங்குகிறார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Next Story