உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சேலத்தில் காங்கிரசார் உண்ணாவிரதம் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு பங்கேற்பு


உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சேலத்தில் காங்கிரசார் உண்ணாவிரதம் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு பங்கேற்பு
x
தினத்தந்தி 30 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 8:41 PM IST)
t-max-icont-min-icon

உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சேலத்தில் நேற்று காங்கிரசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சேலம், 

சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சேலம் உருக்காலை, கஞ்சமலை, திருவண்ணாமலையில் 2 மலைகள் ஆகியவற்றை எல்லாம் ஒரு தனியாருக்கு கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இங்குள்ள இரும்புதாது மற்றும் இதர மூலப்பொருட்களை எடுத்து செல்வதற்காக 8 வழிச்சாலை அமைக்க முன்வந்திருக்கிறார்கள்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் இது. இவர் இந்த மாவட்டத்தில் எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்து இன்றைக்கு முதல்–அமைச்சராகி இருக்கிறார். சேலம் உருக்காலையை எக்காரணம் கொண்டும் தனியார் மயமாக்க விடமாட்டேன் என்று முதல்–அமைச்சர் சொல்லியிருந்தால் இந்திய மக்களே அவரை திரும்பி பார்த்திருப்பார்கள். ஆனால் அவர் செய்யவில்லை.

வேலூரில் அவர், மிட்டாய் வாங்கி கொடுத்து வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தல் வெற்றி கொள்கைக்காக கிடைத்தது. மிட்டாயிக்காக கிடைத்த வெற்றி அல்ல. சேலம் உருக்காலையில் உள்ள தகடுகளை பயன்படுத்தி தான் ரெயில்வே மேம்பாலங்கள் அமைத்திருக்கிறார்கள். சந்திரயான்–2 விண்கலத்தின் பல்வேறு பொருட்கள் இங்கு தான் உற்பத்தி செய்யப்பட்டது. பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து விட்டார். நம்முடைய உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றால் மக்கள் கடுமையாக போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறும் போது, ‘சேலம் உருக்காலை இருக்கிற காரணத்தால் தான் ஸ்டெயின்லெஸ், ஸ்டீல் போன்றவை விலைகுறைவாக கிடைக்கிறது. இதையும் தனியாருக்கு தாரைவார்த்து விட்டால் அவர்கள் விற்கிற விலை தான். அந்த பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் என்பதை புரிந்து கொண்டு தனியாருக்கு விற்கக்கூடாது என்று போராடுகிறோம். எங்களுடைய போராட்டம் தொடரும். அடுத்து மனிதசங்கிலி போராட்டம் நடத்துவோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி அனைவரும் பிரதமரை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை தெரிவிப்போம்‘ என்றார்.

உண்ணாவிரத போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சிரிவெல்லபிரசாத், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, மேற்கு மாவட்ட தலைவர் முருகன், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் சி.பி.வைத்திலிங்கம், கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story