ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 July 2019 11:15 PM GMT (Updated: 30 July 2019 6:30 PM GMT)

ஒகேனக்கல், மேட்டூருக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது.

தர்மபுரி,

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடிக்கும் மேல் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்போது மழையளவு குறைந்திருப்பதால் இந்த இரு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று 2 அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்த வண்ணம் உள்ளது.

இதன்படி நேற்றுமுன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று சற்று அதிகரித்தது. மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நேற்று 8-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

இதனிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூருக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று சற்று அதிகரித்து வினாடிக்கு 8 ஆயிரத்து 900 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 45.33 அடியாக இருந்தது. நேற்று ஒரு அடி அதிகரித்து நீர்மட்டம் 46.49 அடியாக உயர்ந்தது. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து ஆடிப்பெருக்கிற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Next Story