இலங்கை சிறையில் இருந்த ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை; படகின் உரிமையாளர் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு


இலங்கை சிறையில் இருந்த ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை; படகின் உரிமையாளர் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 July 2019 4:45 AM IST (Updated: 31 July 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் சென்ற படகின் உரிமையாளர் நேரில் ஆஜராக இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளையில் இருந்து கடந்த 12–ந்தேதி பாலவன்னியன் என்பவருக்கு சொந்தமான ஒரு நாட்டுப் படகில் சங்கர், கவியரசன், ராஜி, நாகூர், செட்டி உள்பட 6 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

இந்த 6 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நாட்டுப் படகு மற்றும் 6 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் அந்த 6 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன், இந்த 6 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அத்துடன் படகின் உரிமையாளர் வருகிற செப்டம்பர் மாதம் 17–ந்தேதி ஊர்க்காவல்துறை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த தகவலை பாம்பன் நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்தார். விடுதலை செய்யப் பட்ட மீனவர்கள் விரைவில் ஊர்திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story