தாராபுரத்தில் இருந்து மும்பைக்கு கடத்தி சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது


தாராபுரத்தில் இருந்து மும்பைக்கு கடத்தி சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2019 5:00 AM IST (Updated: 4 Aug 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருமண ஆசை வார்த்தை கூறி தாராபுரத்தில் இருந்து மும்பைக்கு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள ஆச்சியூர் கிராமத்தை சேர்ந்த 17 வயதான சிறுமி பிளஸ்–2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 14–ந்தேதி இரவு, தனது தாயாருடன், அந்த சிறுமி படுத்து தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலை அவருடைய தாயார் படுக்கையிலிருந்து எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், தாராபுரம் போலீசில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:–

சிறுமியை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சில தகவல்களின் அடிப்படையில் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து அவர் மும்பையில் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் மும்பைக்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்டதோடு, அவரை கடத்திச்சென்ற முகமதுரபீக் என்கிற வாலிபரையும் கைது செய்தோம்.

முகமதுரபீக்கிடம் நடத்திய விசாரணையில், மும்பை முல்லண்டு கிழக்கு, பத்ரசாலி 4–வது வீதியைச் சேர்ந்தவர் இதயத்துல்லா. இவரது மகன் முகமதுரபீக் (வயது 22) இதயத்துல்லா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு முகமதுரபீக் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவருடைய பெரியம்மா தாராபுரம் அருகே உள்ள அலங்கியம், பெரிய பள்ளிவாசல் வீதியில் குடியிருந்து வருகிறார். பெரியம்மாவைப் பார்ப்பதற்காக அடிக்கடி முகமதுரபீக் அலங்கியத்திற்கு வருவது வழக்கம்.

பெரியம்மா வீட்டிற்கு வந்தால் இங்கு ஏதாவது வேலை செய்து கொண்டு, ஒரு மாதம் அல்லது 2 மாதம் தங்கி இருந்துவிட்டு செல்வது வழக்கம். அவ்வாறு முகமதுரபீக் அலங்கியத்தில் அவருடைய பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தபோது, தாராபுரத்தில் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்த ஆச்சியூரை சேர்ந்த 17 வயது சிறுமியை பார்த்துள்ளார். அந்த சிறுமி பள்ளிக்கு வந்துவிட்டு, ஆச்சியூரில் உள்ள வீட்டிற்குச் செல்லும் போது, தினமும் முகமதுரபீக் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்படி ஒருநாள் அவர் சிறுமியை பின்தொடர்ந்து சென்றபோது, அவரை தடுத்து நிறுத்தி, அவரிடம் ஆசை வார்த்தைகளை பேசியுள்ளார். கூடவே திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். சிறுமி இதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் ஒருநாள் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, முகமதுரபீக் அங்கு சென்று, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு தன்னுடன் வந்தால், மும்பையில் பல இடங்களை சுற்றிக்காட்டுவதோடு இருவரும் திருமணம் செய்து கொண்டு, சொகுசாக வாழலாம் என ஆசைகாட்டி, சிறுமியை முகமது ரபீக் மும்பைக்கு கடத்தி சென்றுவிட்டார். பின்னர் அங்கு சென்றதும் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது என்று கூறினார்கள்.

இதையடுத்து போலீசார் முகமதுரபீக்கையும், சிறுமியையும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன்பிறகு முகமதுரபீக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story