நிதி நிறுவனம் நடத்தி ரூ.2½ கோடி மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்
நிதி நிறுவனம் நடத்தி ரூ.2½ கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் முன்பு நேற்று காலை 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி பகுதியை சேர்ந்தவர்கள். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு நிதிநிறுவனத்துக்கு திண்டுக்கல் மாவட்டம் உள்பட 16 இடங்களில் கிளைகள் உள்ளன. இங்கு சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.500 முதல் ரூ.1,000 வரை சேமிக்கலாம். அந்த பணம் குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியுடன் திருப்பித்தரப்படும் என்று அந்த நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை நம்பி நாங்கள் அந்த நிறுவனத்தின் சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டினோம். திண்டுக்கல் மாவட்டத்தில் எங்களை போல் ஆயிரக்கணக்கானோர் இந்த திட்டத்தில் சேர்ந்தனர். எங்களிடம் இருந்து ரூ.2½ கோடி வரை சேமிப்பு தொகையாக அந்த நிதி நிறுவன ஊழியர்கள் வசூலித்தனர். மேலும் சேமிப்பு திட்டம் தொடங்கிய போது, அதற்கான பத்திரங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன் மாதந்தோறும் பணம் செலுத்திய போது ரசீதும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டே எங்களுக்குரிய சேமிப்பு திட்டம் முதிர்வு பெற்றுவிட்டது. ஆனால் அதற்கான பணத்தை தற்போது வரை அந்த நிதி நிறுவனத்தினர் வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை அந்த நிதிநிறுவன ஊழியர்களிடம் கேட்டுவிட்டோம். ஆனால் பலன் இல்லை. மேலும் எங்களுக்கு மிரட்டலும் விடுத்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அந்த நிதிநிறுவனத்தின் கிளைகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டன. எனவே எங்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்ற போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story