சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 4:30 AM IST (Updated: 7 Aug 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எருமப்பட்டி,

எருமப்பட்டி அருகே பவித்திரத்தில் உள்ள குரும்ப தெருவில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அப்போதும் குறைந்த அளவு தண்ணீரே வருகிறது. தண்ணீர் திறந்து விட்டாலும் இந்த பகுதியில் உள்ள முதல் 2 தெருகளுக்கு மட்டுமே தண்ணீர் வருகிறது.

இங்குள்ள மற்ற 3 தெருக்களுக்கு தண்ணீர் சரிவர வரவில்லை என்றும், டேங் ஆபரேட்டர்கள் சரிவர தண்ணீர் திறந்து விடுவது இல்லை என்றும், எங்களுக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி பவித்திரம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள நாமக்கல்-துறையூர் செல்லும் சாலையில் நேற்று காலை 8 மணியளவில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவலறிந்த எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களிடம் சீராக தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பஸ்களை மாற்றுப்பாதை வழியாக அனுப்பி வைத்தனர். ஆனால் பள்ளி வாகனங்கள் மற்றும் வாகனங்கள் அங்கேயே அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story