இணையதளம் முடங்கியதால் சென்டாக் அலுவலகம் முற்றுகை


இணையதளம் முடங்கியதால் சென்டாக் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 7 Aug 2019 10:25 PM GMT (Updated: 7 Aug 2019 10:25 PM GMT)

சென்டாக் இணையதளம் முடங்கியதால் மாணவர்கள், பெற்றோர்கள் சென்டாக் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் எம்.பி.பி.எஸ்., என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. சமீபத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி கலந்தாய்வு நடந்து முடிந்ததில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 282 இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது விருப்பத்தை தெரிவித்து பொதுப்பிரிவினர் ரூ.10 ஆயிரமும், தாழ்த்தப்பட்டோர் ரூ.5 ஆயிரம், நிர்வாக இடஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.50 ஆயிரமும் செலுத்த வேண்டும் என்று சென்டாக் அறிவித்திருந்தது.

ஆனால் சென்டாக் இணையதளம் செயல்படாமல் முடங்கியதால் சென்டாக் குறிப்பிட்ட கட்டணத்தை மாணவர்களால் செலுத்த முடியவில்லை. இந்தநிலையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நேரு, வைத்தியநாதன் தலைமையில் பெற்றோர்கள், மாணவர்கள் ‘பிப்மேட்’ அலுவலக வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இணையதளம் முடங்கியது தொடர்பாக அவர்கள் சென்டாக் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு ஆதரவாக சென்டாக் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர். அங்கிருந்த அதிகாரிகள் இணையதளம் விரைவில் சரிசெய்யப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் கட்டணம் செலுத்த காலஅவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே அவ்வப்போது இணையதள சேவை விட்டுவிட்டு கிடைத்தது. இருந்தபோதிலும் மாணவர்களால் கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை.

இதற்கிடையே மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா சென்டாக் தலைவர் அன்பரசிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு அரசு இணையதளத்தை பயன்படுத்தாமல் தனியார் இணையதளத்தை பயன்படுத்துவதாகவும், தனியாருக்கு ஆதரவாக சென்டாக் நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அதுபோல சென்டாக் இணையதள சேவையை உடனடியாக சரிசெய்யவேண்டும் என்று கோரி மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் தலைமையில் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், வக்கீல்கள் பிரிவு தலைவர் அசோக் பாபு, நிர்வாகிகள் கோபி, தினகரன் ஆகியோர் சென்டாக் ஒருங்கிணைப்பாளரும் கல்வித்துறை இயக்குனருமான ருத்ரகவுடுவை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அப்போது அவர் உறுதியளித்தார்.


Next Story